650. | அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய் | | ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள் | | தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி | | சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம் | | தரித்தநம் பிசம யங்களின் நம்பி | | தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை | | இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி | | எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. | | 6 |
பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே, அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே' எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன்! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். கு-ரை: குறுதல் - அழித்தல். குற்று - அழித்து. குலைத்தல் - வளைத்தல். பலவகை அடைபுணர்த்து 'நம்பி' எனப் பாடுதற் கிடையில், அடையின்றியே "நம்பி" என்றதனால், 'ஒப்பற்ற பெரிய நம்பி' என்பது பெறப்பட்டது. உயிர்கள் உன்னை வாழ்த்துதல் இயலுமன்றி, கைம்மாறு யாதும் செய்தல் இயலாது என்றவாறு. 6. பொ-ரை: உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே, நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே, பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே, ஒற்றை எருதையுடைய நம்பியே, இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று, திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே, சமயங்கள் பலவற்றிற்கும் தலைவனாகிய நம்பியே, அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து, ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். கு-ரை: ஆளுதல் - புரத்தல். "முன்னை" என்றதனால், 'பின்னை' என்பதும் பெறப்பட்டது. "ஈண்டு உலகம்" வினைத் தொகை. தெரித்தல் - தோற்றுவித்தல். "மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ" (தி. 6 ப. 34 பா. 1) என்று அருளிச் செய்தார், திருநாவுக்கரசரும்.
|