656. | பிணிகொளாக்கை பிறப்பிறப் பென்னு | | மிதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள் | | துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ | | அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதில்மூன் | | றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும் | | ஐயன் வையகம் பரவிநின் றேத்தும் | | திணியும் வார்பொழில் திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 2 |
இயைபின்றி, நன்மையே வடிவாய் உள்ளவன் இறைவன் ஒருவனேயாகலின், 'சிவன்' என்பது அவனுக்கே பெயராயிற்று. "சிவன்எனும் நாமம் தனக்கே யுடையசெம் மேனிஎம்மான்" என்ற திருமொழி (தி. 4 ப. 112 பா. 9)யுங் காண்க. இவ்வாறு நிரம்பிய மங்கலம் உடையனாதலைக் குறிக்கவே, அவனை, 'சிவக் கொழுந்து' என்றும் அருளிச்செய்வர் ஆசிரியர் என்க. 'கொழுந்து' என்றது, உருவகம். இத்தலத்து இறைவன் பெயர் 'சிவக்கொழுந்தீசன்' எனப்படுகின்றது. 2. பொ-ரை: மனமே, நீ, நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும், பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும்பினால், அதற்கு வழிசொல்லுவேன்; கேள்; வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை, அழகிய, கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய, செறிந்த, நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, உலகமெல்லாம், முன்னிலையாகவும், படர்க்கையாகவும் நின்று துதிக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக; மனமே, அஞ்சாதி. கு-ரை: துணிதல், தன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது. வற்புறுத்தற் பொருட்டு, மறித்தும், "நெஞ்சே" என்று விளித்து உணர்த்தினார். அணி, வில்லிற்குரியன பலவுமாம்.
|