பக்கம் எண் :

972
 
661.தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்

தவம்மு யன்றவ மாயின பேசிப்

பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்

பெரிதும் நீந்துவ தரிதது நிற்க

முன்னெ லாம்முழு முதலென்று வானோர்

மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்

செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

7



பிறப்புக்களுமாம். இரண்டினை இரப்பார், அவ்வவ்விடத்தும் 'மனமே' என விளித்தார் என்க. "கடற் சூர்" என்றதற்கு, 'கடலிடை வாழ்ந்த சூரன்' என்று உரைத்தலுமாம்.

7. பொ-ரை: மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது, தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி, பின்னுதல் பொருந்திய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொள்ளுதலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே, மக்கள், பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க, நீ, தேவர்கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய, செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று, இவனே, தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

கு-ரை: "தன்னில்" என்றது, பன்மை யொருமை மயக்கம்; அவரவரது சித்தத்தையும் தனித்தனிக் குறித்தவாறு. "தவம்" என்றது, பலவகை நோன்புகளை; பயனில்லாத சொற்கள், 'விரதங்களே பயன்தரும்; முதல்வன் வேண்டா' என்று கூறுவன.

இங்ஙனங் கூறுவோர் மீமாஞ்சகர்; அவரது நிலையை,

"விரத மேபர மாகவே தியரும்சரத மாகவே சாத்திரங் காட்டினர்"

(தி. 8 திருவா. போற்றி 50, 51)

எனவும்,