பக்கம் எண் :

975
 
664.நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து

நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்

சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்

நாட லாம்புகழ் நாவலூ ராளி

நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த

பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்

முத்தி யாவது பரகதிப் பயனே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: எல்லையில்லாத, நிலையற்ற பிறவியை வெறுத்து, அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து, திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும், புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது, மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம்.

கு-ரை: 'நீடு பிறவி, பொக்கையினையுடைய பிறவி' என்க. உள்ளீடின்மையைக் குறிக்கும் 'பொக்கு' என்பது அம்முப் பெற்று, 'பொக்கம்' என வருதல்போல, ஐ பெற்று, "பொக்கை" என வந்தது. 'பொய்' என்னும் பொருளதாகிய இது, நிலையின்மையை உணர்த்திற்று. 'மனத்தினைத் தெருட்டி, திருவடியிணையை நாடலாம் பாடல்' என இயைக்க. 'இணைதான்' என்னும் தான், அசைநிலை. 'நாடற்கு ஆம்' என உருபு விரிக்க. ஆதல் - துணையாதல். 'நாடெலாம் புகழ்' என்பது, பாடம் அன்று. 'தமிழ்ப் பாடலாம் இவை பத்து' என மாறிக் கூட்டுக. முற்றும்மை தொகுத்தலாயிற்று. "முத்தி" என்றது, 'இன்ப நிலை' என்னும் பொருளதாய் நின்றது. மிக மேலான நிலையாவது, இறைவனோடு இரண்டறக் கலத்தல்.