பக்கம் எண் :

977
 
666.அணிகொ ளாடையம் பூணணி மாலை

யமுது செய்தமு தம்பெறு சண்டி

இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்

ஈன்ற வன்திரு நாவினுக் கரையன்

கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற

காதல் இன்னருள் ஆதரித் தடைந்தேன்

திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.

2



"சிலந்தியார்" என, உயர்திணையாக அருளிச்செய்தார். 'சிலந்தியாய்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 'நினைக்கும் பணி, சொல்லும் பணி, செய்யும் பணி' எனப் பணிகள் மூவகைப்படுதலானும், 'செய்தல்' என்னும் பொதுவினை, அவைகட்கும் ஏற்குமாதலானும், "செய்த செய்பணி" என்று அருளிச்செய்தார். கோச்செங்கண் நாயனாரது வரலாற்றின் விரிவை, பெரிய புராணத்துட் காண்க. "தென்றிரு நின்றியூர்" என்றதற்கு, 'தென்றிசையில் உள்ள திருநின்றியூர்' என உரைத்தலுமாம். இதற்கு, தமிழ் நாட்டின்கண் உள்ள ஊர் என்பது கருத்தாகும்.


இது சிலந்திக்கு அருளிய செயலை எடுத்து அருளிச் செய்தவாறு.

2. பொ-ரை: திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்பால், பாலைக் கொணர்ந்து ஆட்டி, அழகினைக் கொண்ட ஆடை, அழகிய அணிகலம், சூடுகின்ற மாலை, திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும், தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்து தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக்கரசரும், அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற, அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: "அமுது" இரண்டனுள், முன்னையது பால்; பின்னையது உண்டி. "செய்து" என்றது, 'ஆட்டி' என்றவாறு. தமக்கு நிவேதனம் செய்த அமுதம் என்பது அது, கறந்து கொணர்ந்து ஆட்டியதைக் குறித்தது. சண்டேசுர நாயனாருக்குச் சிவ பெருமான், தாம் உடுத்த