உடை முதலியவற்றை, அவருக்கு உரியனவாக அளித்தமையை, "நாம் - உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக" (தி. 12 பெ. புரா. சண்டே. புரா. 56) என்றது பற்றி அறிந்துகொள்க. 'திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த செய்யுட்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரம்' என்பதனை இங்கு எடுத்தோதி அறிவுறுத் தவாறறிக. 'பனுவல்' என்பது, பாடலையுங் குறிக்கும்; பதிகத்தையும் குறிக்கும்; எனினும், நம்பியாண்டார் நம்பிகள், அதனை, 'பதிகம்' என்றே விளக்குதலை, "பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவி யோகி" -திருவேகாதச மாலை - 7 என்பதனான் அறியலாகும். சேக்கிழார், "நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி ஒன்றியஅன் புள்ளுருகப் பாடுவார் உடையஅரசு என்றும்உல கிடர்நீங்கப் பாடியஏ ழெழுநூறும் அன்றுசிறப் பித்தஞ்சொல் திருப்பதிகம் அருள்செய்தார்"
என்று, (தி. 12 ஏயர். 150) பொதுவே அருளிப் போயினார். நம்பியாண்டார் நம்பிகள், ஓரிடத்து திருஞானசம்பந்தரது திருப்பாடல் பற்றி,
"பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும்" (தி. 11 ஆளுடைய பிள்ளை யார் திருவுலா மாலை - 63, 64) என்று, 'பனுவல்' என அருளிச்செய்தவர். பிறிதோரிடத்து, "பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா" (தி. 11 ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - 22)
|