பக்கம் எண் :

979
 
667.மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி

மூன்று நூறுவே தியரோடு நுனக்கு

ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி

ஓங்கு நின்றியூ ரென்றுனக் களிப்பப்

பத்தி செய்தவப் பரசுரா மற்குப்

பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்

சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.

3



என்று, 'பதிகம்' என்பது பட அருளிச் செய்கின்றார். இவ்வாற்றால், 'நாலாயிரத்துத் தொள்ளாயிரம்' என்பதும், 'பதினாறாயிரம்' என்பதும், பதிகங்கள் என்றே கொள்ளக்கிடக்கின்றன.

இனி, பாடலன்றி, பதிகமே நாற்பத்தொன்பதினாயிரம் என்பார்க்குச் சான்று ஏதும் இல்லை என்க.

"ஈன்றவன்" என்று அருளினார், பாடலையும், 'எச்சம்' என்னும் வழக்குப் பற்றி. 'உயர்திணை, அஃறிணை' என்னும் சொல் வரையறைகளும், 'அகத்திணை, புறத்திணை' என்னும் பொருள் வரையறைகளும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பியல்பாதல் பற்றி, "திணைகொள் செந்தமிழ்" என்று அருளினார். 'செந்தமிழைப் பைங்கிளி தெரியும்' என்றது, ஓர் நயம் கிளிகள் தமிழை ஆராய்தல், பலரிடத்துக் கேட்கும் பயிற்சி பற்றி என்க.

இது, நாயன்மார்கட்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு.

3. பொ-ரை: சித்தர், தேவர், அசுரர், ஆகியோர் வணங்குகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு, முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை, என்றும் விளங்கும் 'திருநின்றியூர்' என்று பெயரிட்டு, ஏற்புடைய, பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.