பக்கம் எண் :

980
 
668.இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்

எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்

சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்

தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்

பரவி யுள்கிவன் பாசத்தை யறுத்துப்

பரம வந்துநுன் பாதத்தை யடைந்தேன்

நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்

அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே.

4



கு-ரை: இஃது இத் தலத்தின் தோற்றம் பற்றிய புராண வரலாறு. ஒத்தல், தாரை வார்த்தற்கு ஏற்புடையதாதல். முந்நூறு வேதியரையும் இறைவனுக்கு உரியவராக நீர் வார்த்துக் கொடுத்தற்குப் பல கலசங்கள் வேண்டப்பட்டன என்க.

இது, பரசுராமனுக்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு.

4. பொ-ரை: மேலானவனே, நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி, அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னை, பசு ஒன்று, சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து, தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு, அடியேன், உனது திருவடியை நினைத்துத் துதித்து, பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: பசு சிவபெருமானை வழிபட்டு முத்தி பெற்ற தலங்கள், ஆவூர், ஆனிலை முதலியன. நிரவி அளித்தலுக்கு எழுவாய் எஞ்சி நின்றது. இனி, 'முத்தையும், பொன்னையும் புலவர் முதலியோர்க்கு மிக அளிக்கும் திருநின்றியூர்' எனினுமாம். 'ஒருமடி தானே பல கலசங்களாகக் கொள்ளப்பட்டது' என்பார், 'கலசங்கள் ஏந்தி' என்று அருளினார்.

இது, பசுவிற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு. 'பசு, காமதேனு' என்றும், 'அஃது இங்கு வழிபட்டு முத்தி பெற்ற வரலாறே இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்றது' என்றும் உரைப்பாரும் உளர்.