பக்கம் எண் :

981
 
669.வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து

வான நாடுநீ யாள்கென அருளிச்

சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்

சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்

சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்

சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்

செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.

5



5. பொ-ரை: செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும், செல்வத்தை யுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, இந்திரன் ஒருவன், உன்னிடத்து வந்து உன்னை வழிபட, அதற்கு மகிழ்ந்து, அவனுக்கு, 'நீ, விண்ணுலகை ஆள்க' என்று சொல்லி வழங்கிய தலைமையையும், 'காலை, நண்பகல், மாலை' என்னும் மூன்று சந்திகளிலும், இலிங்க உருவத்தை நிறுவி, கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: இந்திரராய் வருவோர் எண்ணிறந்தவராதலின், "ஓர் இந்திரன்" என்று அருளினார். "அருளி" என்ற எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின், அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. 'சகளம்' என்பது, 'கலையொடு கூடியது' எனப் பொருள் தருவது. அதனொடு இகர விகுதி புணர்த்து "சகளி" என அருளவே, 'கலைகளை உடைய திருமேனி' என்பது பொருளாயிற்று. "தாபரம் நிறுத்திச் சகளிசெய்து" எனவே, "இலிங்கத் திருமேனியில் கலையுருவத்தைப் பாவனையால் அமைத்து" என்றவாறாயிற்று. சிவ வழிபாட்டிற் கொள்ளப்படும் மந்திரங்கள் பலவற்றுள்ளும், 'பஞ்சப்பிரம மந்திரங்கள்' எனப்படும் ஐந்தும், 'சடங்க மந்திரங்கள்' எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். இப்பதினொன்றனையும், 'சங்கிதா மந்திரங்கள்' என்ப. 'மந்திரம்' எனச் சிறந்தெடுத்துச் சொல்லப்படுவன, இப்பதினொன்றுமே என்பதனை,

"பந்தமுறு மந்திரங்கள் பதினொன்று மாதலினால்
அந்தமுறை நான்கினோடு முறைபதினொன் றாக்கினார்"

திருமுறைகண்ட புராணம் (பா. 28) கூறுவதும் அறிக.