670. | காது பொத்தரைக் கின்னரர் உழுவை | | கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம் | | கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் | | கோல ஆல்நிழற் கீழறம் பகர |
பதினொரு மந்திரங்களுள்ளும் ஈசானம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்கள் ஐந்தும் முதன்மையானவை. அவை மந்திரோப நிடதத்துள் நீண்ட தொடர்களாய் உள்ளன. அவையே சிவாகமங்களிற் சிறிய தொடர்களாக அவ்வவ்வற்றிற்கு உரிய வித்தெழுத்துக்களுடன் (பீஜாட்சரங்களுடன்) சொல்லப்படுகின்றன. சிவ வழிபாட்டினைச் சுருக்கமாகச் செய்யுமிடத்து, ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்துச் செய்யப்படும். விரிவாகச் செய்யுமிடத்து, வேத மந்திரங்கிளை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து எல்லா உறுப்புக்களாகவும் வைத்துச் செய்யப்படும். இம் முப்பத்தெட்டுக் கூறுகளே, 'கலை' எனப்படும். சிவனது பல்வேறு வகைப்படட சத்திகளே இக்கலைகளின் வடிவாய் நிற்குமாதலின், அவை வாயிலாகக் கருதப்படும் சிவபிரானது வடிவம், சத்தி சமூக வடிவமேயாம். ஆதலின், இங்ஙனம் சிவபிரானை முப்பத்தெட்டுக் கலைவடிவினனாக உணர்ந்து வழிபடுதல் சிவநெறியில் சிறந்த வழிபாடாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் தோன்றவே, சுந்தரர், "சகளி செய்து இறைஞ்சு அகத்தியன்" என்று அருளினார். ஆகவே, சிவ வழிபாட்டின் முறைகளைக் குறிப்பால் அருளியவாறாயிற்று. 'கடவுள் முப்பத்தெட்டுக் கலைவடிவினன்' என்பது சைவத்தின் கொள்கையாக மணிமேகலைக் காப்பியமும் குறிப்பிடுகின்றது. (சமயக் கணக்கர்தந் திறங்கேட்ட காதை - 91) சிவ வழிபாட்டிற் கொள்ளப்படும் முறையே, சிவநெறியினர் தம்மைச் சிவமாகப் பாவித்துச் செய்து கொள்ளும் திருநீற்றுப் புண்டரம், அங்க நியாசம், கர நியாசம் முதலியவற்றிலும் கொள்ளப்படுவது. வைதிக நெறியினர் இவற்றைக் கொள்ளுதல் இல்லை. 'அகத்தியர் தமக்கு' என்பது, ஓதுவோர், தாம் வேண்டியவாறு ஓதிய பாடம் என்க. இஃது, இந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்தது. 6. பொ-ரை: நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ், உலகமுழுதும் விளங்குகின்ற, அழகிய திரு
|