போற்றப்பெறுவதாகும். தளைப்பட்டுக் கிடக்கும் உயிர், தளையறுத்து இறைவன் திருவருளை எய்துதல் வேண்டும். அதற்கு ஞானாசாரியன் அருள்வேண்டும். நம் சமயப் பெருந்தலைவர்களாகிய தேவார ஆசிரியர் மூவரும் குருவருள் பெற்றுப் பாடியருளிய முதற்றிருப் பதிகங்களை முதற்கண் குருவருள் எனுந்தலைப்பிற் காணலாம். திருஞானசம்பந்தர்க்கு உலகெலாம் ஈன்ற அன்னையே ஆசிரியத் திருக்கோலம் கொண்டருளினள்; திருநாவுக்கரசர்க்கு உடன்பிறந்த தமக்கையாராகிய திலகவதியாரே ஆசிரிய நிலையில் நின்று அறிவுறுத்தக் காணலாம். இதனை அப்பரடிகளே கூறிமகிழும் தேவாரப் பகுதியும் ஒப்பிட்டறிதற்குரியது. எம்மையாரிலை யானும உளேனலேன் எம்மையாரும் இதுசெயவல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கு அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே. (தி. 5 ப. 7 பா. 6) சுந்தரர்க்கோ இறைவனே ஞானாசிரியனாக எழுந்தருளி, நல்லருள் வழங்கினன். சுந்தரர், மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் நெறியே நின்னடியார் நினைக்கும் திருக்காளத்தியுள் அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. (தி. 7 ப. 26 பா. 4) எனப்பாடுகின்றார். இதனுள் 'என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்' என்று பாடுதல் கருதி உணரத்தக்கது, 'அத்தா' என்றும், 'ஆயா' என்றும், 'அன்னே' என்றும், 'அடிகேள்' என்றும், 'ஆதீ' என்றும், 'அண்ணா' என்றும், 'ஆனாய்' என்றும், 'ஆற்றாய்' என்றும், 'அழகா' என்றும் இறைவனை விளித்து, உனக்கு அடிமையான பிறகு அல்லேன் என்று கூறலும் ஆமோ என்பது குருவருட் பதிகத்தின் கருத்தாகும். பரை வரலாறு: குருவருள் பெற்ற உயிர் முதல்வனது பராசக்தியின் விளக்கத்தை
|