பக்கம் எண் :

988
 
674.திகழும் மாலவன் ஆயிர மலரால்

ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்

புகழி னால்அவன் கண்ணிடைந் திடலும்

புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்

திகழு நின்திருப் பாதங்கள் பரவித்

தேவ தேவநின் திறம்பல பிதற்றி

அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்

ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

3



3. பொ-ரை: தேவர்கட்குத் தேவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, மிக்க புகழுடையவனாகிய திருமால் நாள்தோறும் ஆயிரந் தாமரைப் பூக்களால் உன்னை அருச்சிக் கின்றவன், ஒருநாள் ஒரு சிறந்த பூக்குறைய, அவன் அதற்கு மெலியாது, புகழத்தக்க உறுதிப் பாட்டுடன், தனது கண்களில் ஒன்றைப் பெயர்த்து உனக்குச் சாத்த, அதனைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு நீ சிறந்த சக்கரப்படையை அளித்தமையை உணர்ந்து, அடியேன், என் நிலைமையைப் பெயர்த்து, நிலையில்லாது உழலச் செய்கின்ற வலிய வினைக்கு அஞ்சி, ஒளிவீசுகின்ற உனது திருவடிகளைத் துதித்து, உனது பெருமைகள் பலவற்றையும் பலகாற் பேசி, உன்னை வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: திருமால் இவ்வாறு சிவபிரானை வழிபட்டு, அப்பெருமான் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுத் தோற்றுவித்த சக்கரப் படையைப் பெற்றமையை


"சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி
நலமுடைய நாரணன்றன் நயனமிடச் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ"

(தி. 8 திருவா. திருச்சாழல் - 18.)


"பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தன்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ"

(தி. 8 திருவா. திருத்தோ - 10.)