பக்கம் எண் :

989
 
675.வீரத் தால்ஒரு வேடுவ னாகி

விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து

போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்

புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்

வாரத் தால்உன நாமங்கள் பரவி

வழிபட் டுன்திற மேநினைந் துருகி

ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்

ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

4



என்னும் திருவாசகத் திருப்பாடல்களால் அறிக. 'நாண் மலர்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும், பித்தர்போலப் பலகாற் கூறுதலை, "பிதற்றி" என்று அருளினார்.

இது, திருமாலுக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது.

4. பொ-ரை: திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, ஒரு வேடுவனாய் உருக்கொண்டு, ஒரு பன்றியை, வீரத்துடன் விரைந்து துரத்திச் சென்று, உன்னை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனனை அடைந்து, அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு போர் புரிந்து, பின்பு அவனுக்கு, சிறந்த படையாகிய பாசுபதக் கணையை அளித்தமையை அறிந்து, அடியேன் உனது தன்மைகளை நினைந்து உருகி, உனது திருப்பெயர்களை அன்போடு சொல்லி உன்னை வழிபட்டு, ஆர்வத்தோடு வந்து உன் திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: 'விசைந்து' என்பது பாடம் அன்று. 'அன்பாய்ப் போரைப் புரிந்து விசயனுக்குப் படை கொடுத்தல்' என இயையும், இவ்வாறு அருச்சுனனுக்கு அருளிய வரலாற்றை, பாரதத்துட் காண்க.

இஃது, அருச்சுனனுக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது.