பக்கம் எண் :

திருவாசகம்
108


செயலாகவே இறைவன் என்று கொண்டு அவர்களைக் காக்கின்றான் என்பதைப் புலப்படுத்த "சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயேயாகி வளர்த்தனை" என்றார்.

இதனால் இறைநெறிச் செல்வோரது தன்மையும், அவர் பெறும் பேறும் கூறப்பட்டன.

மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி!

பதப்பொருள் : மெய்தரு வேதியனாகி - மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகெட - வினைகள் ஒழிய, கைதர வல்ல கடவுள் போற்றி - கை கொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே வணக்கம்.

விளக்கம் : வினைகளாவன : சஞ்சிதம் ஆகாமியம் என்பன. முற்பிறவிகளில் தொடர்ந்து வந்த தொகைவினை, ‘சஞ்சிதம்’; வரு பிறவிகளுக்கு ஏதுவாகிய எதிர்வினை, ஆகாமியம், இவ்விரண்டும் இறைவன் குருமணியாய் எழுந்தருளி ஆட்கொள்ளுங்காலை அவன் அருள் நோக்கால் எரிந்தொழிதலைக் குறிப்பிடுவார், "வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள்" எனக் குறிப்பிட்டார்.

90. ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்றில்லை மன்றினு ளாடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி!

பதப்பொருள் : ஆடகம் - பொன்மயமாயிருக்கிற, மதுரை அரசே போற்றி - மதுரைக்கு அரசனே வணக்கம், கூடல் இலங்கு - கூடற்பதியில் விளங்குகின்ற, குருமணி போற்றி - நன்னிற மாணிக்கமே வணக்கம், தென்தில்லை மன்றினுள் - தென் தில்லையம்பலத்தில், ஆடி போற்றி - ஆடுவோனே வணக்கம், இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் - இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : ஆடகம் - ஒருவகைப் பொன். இறைவன் தடாதகைப் பிராட்டியாரைச் சோமசுந்தரப் பெருமானாக வந்து மணந்து, மதுரை மாநகரை ஆண்ட வரலாற்றை, "மதுரை அரசே!" என்பதனால் குறிப்பிட்டார்.

மதுரை கூடலானது :

முன்னொருகால் வருணன் கோபங்கொண்டு மதுரை மாநகரை அழிக்க வேண்டி ஏழு மேகங்களையும் ஏவினான். ஆனால், இறைவன் பாண்டியன் வேண்டுகோளுக்கிரங்கி, நான்கு மேகங்களை ஏவி, நான்கு மாடங்களாக மதுரை மாநகரைக் காக்கச் செய்தான். நான்கு மேகங்களும் கூடிக் காத்தமையால் மதுரை, நான்மாடக் கூடலாயிற்று. இவ்வரலாற்றை உட்கொண்டு "கூடல் இலங்கு குருமணி" என்றார்.