பக்கம் எண் :

திருவாசகம்
109


பதஞ்சலி வியாக்கிரபாதர்களாகிய முனிவர்களின் தவத்துக்கு இரங்கி, இறைவன் தில்லையம்பதியாகிய சிதம்பரத்தில் பரவெளியில் திருக்கூத்து இயற்றியருளினான். அதனால், "தென் தில்லை மன்றினுள் ஆடி" என்றார். பாரத நாட்டின் தென்பகுதியில் உள்ளமையால் "தென்தில்லை" என்றார். இறைவிக்காகவும் அரசருக்காகவும் முனிவருக்காகவும் இரங்கியருளிய இறைவன், தம்பொருட்டும் அருளுகின்றான் என்பதைக் காட்ட "இன்றெனக் காரமுது ஆனாய்" என்றார்.

இறைவன் உயிர்களின்பொருட்டு எழுந்தருளியிருக்கும் பல தலங்களில் மதுரையில் அடிகள்பொருட்டுப் பல திருவிளையாடல்கள் புரிந்ததும், தில்லை எல்லாத் தலங்களினும் மேலாயதும் ஆகையால், இவ்விரண்டையும் முதலிற் கூறினார்.

மூவா நான்மறை முதல்வா போற்றி

95. சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி !

பதப்பொருள் : மூவா - கெடாத, நான்மறை முதல்வா போற்றி - நான்கு வேதங்களுக்கும் முதல்வனே வணக்கம், சே ஆர் - இடபம் பொருந்திய, வெல்கொடி - வெற்றிக் கொடியையுடைய, சிவனே போற்றி - சிவபிரானே வணக்கம்.

விளக்கம் : நான்மறைகள், என்றும் ஒருபெற்றியவாகலின், "மூவா நான்மறை" என்றார். இடபம் அறத்தின் அடையாளம். இறைவன் அறத்தையே கொடியாகக் கொண்டுள்ளான் என்பார், "சே ஆர் வெல்கொடிச் சிவன்" என்றார்.

மின்னா ருருவ விகிர்தா போற்றி
கன்னா ருரித்த கனியே போற்றி!

பதப்பொருள் : மின் ஆர் உருவ விகிர்தா - மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறு வேறு உருவங்களை உடையவனே, போற்றி - வணக்கம், கல் நார் உரித்த கனியே - கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : இறைவன் வடிவங்கள் ஒளி வண்ணமாதலின், "மின் ஆர் உருவம்" என்றார். அவை பலவாதலின், "விகிர்தா" என்றார். விகிர்தன் - வேறுபாடுடையவன். "மின் ஆர் உருவ விகிர்தன்" என்பதற்கு, மாதொரு கூறனாய் உள்ள அற்புத வடிவினன் என்றும் பொருள் கூறலாம்.

கல்லாகிய நெஞ்சில் நாராகிய அன்பை வெளிப்படுத்தியவன் இறவைனாதலின், "கல்நார் உரித்த கனியே" என்றார்.

காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா வென்றனக் கருளாய் போற்றி!