பதப்பொருள் : கனகக்குன்றே - பொன் மலை போன்றவனே, காவாய் - காத்தருள்வாய், போற்றி - வணக்கம், ஆவா - ஐயோ, என்றனக்கு அருளாய் - எனக்கருள் செய்வாய், போற்றி - நினக்கு வணக்கம். விளக்கம் : கனகக்குன்று - மேருமலை. தாம் சிவஞானம் பெற்றும் வீடு பேறு கிட்டவில்லையாதலின், "ஆவா அருளாய்" என்றார். 100. படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி! பதப்பொருள் : படைப்பாய் - எல்லா உலகங்களையும் படைப்பவனே, காப்பாய் - காப்பவனே, துடைப்பாய் - ஒடுக்குபவனே, போற்றி - வணக்கம், இடரைக் களையும் எந்தாய் - பிறவித் துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே, போற்றி - வணக்கம். விளக்கம் : இங்கு இறைவன் ஐந்தொழில் செய்யும் முறையைக் குறித்து வணக்கம் கூறினார். மறைத்தல் தொழில் படைத்தல் முதலிய மூன்றிலும் அடங்கியுள்ளது. ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி! பதப்பொருள் : ஈச போற்றி - ஆண்டவனே வணக்கம், இறைவ போற்றி - எங்கும் நிறைந்தவனே வணக்கம், தேசப் பளிங்கின் திரளே - ஒளியே வீசுகின்ற படிகத்தின் திரட்சியே, போற்றி - வணக்கம். விளக்கம் : ஈசன் என்னும் வட சொல் ‘எப்பொருளையும் ஆள்வோன்’ என்னும் பொருளையுடையது. இறைவன் என்பவன் எப்பொருளினும் தங்கியிருப்பவன் என்பர் பெரியோர். தேசு - ஒளி; தேஜஸ் என்னும் வடசொல் திரிபு. பளிங்கு தூய்மையான ஒளியையுடையது. அதனால், தூயவனாகிய இறைவனை, "தேசப்பளிங்கின் திரள்" என்றார். அரைசே போற்றி யமுதே போற்றி 105. விரைசேர் சரண விகிர்தா போற்றி! பதப்பொருள் : அரைசே போற்றி - தலைவனே வணக்கம், அமுதே போற்றி - சாவாமையைத் தரும் மருந்தானவனே வணக்கம், விரைசேர் சரண விகிர்தா - நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே, போற்றி - வணக்கம். விளக்கம் : இறைவனது திருவடியை மலர் என்பது மரபு. மலரில் மணமும் தேனும் உண்டு; அவைகளை வண்டுகள் நுகர்ந்து இன்புறும். அது போல, இறைவனது திருவடி இன்பத்தை
|