அடியவர்கள் நுகர்ந்து இன்புறுவார்கள். அவற்றைக் குறிப்பிட, "விரைசேர் சரண விகிர்தா" என்றார். வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி! பதப்பொருள் : வேதி போற்றி - வேதத்தை உடையவனே வணக்கம், விமலா போற்றி - குற்றமற்றவனே வணக்கம், ஆதி போற்றி - முதல்வனே வணக்கம், அறிவே போற்றி - அறிவாய் இருப்பவனே வணக்கம். விளக்கம் : வேதி - வேதங்களுக்குத் தலைவன், ஆதி - எப்பொருட்கும் முதல்வன், உயிர்களின் அறிவை அறிவுக்கு அறிவாய் இருந்து விளங்குபவன் இறைவன் ஆகையால், "அறிவே போற்றி" என்றார். கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி! பதப்பொருள் : கதியே போற்றி - வீட்டு நெறியானவனே வணக்கம், கனியே போற்றி - கனியின் சுவை போன்றவனே வணக்கம், நதி சேர் செஞ்சடை - கங்கையாறு தங்கிய சிவந்த சடையையுடைய, நம்பா போற்றி - நம்பனே வணக்கம். விளக்கம் : எல்லா உயிர்களும் இறுதியில் சென்று அடையும் வழி இறைவனேயாகையால், "கதியே" என்றார். பகீரதன் வேண்டச் செருக்கொடு விரைந்து வந்த கங்கையைத் தன் சடையில் அடக்கி அதன் செருக்கை அழித்த வரலாற்றை மனத்திற்கொண்டு "நதிசேர் செஞ்சடை நம்பா" என்றார். நம்பன் - எவ்வுயிரும் விரும்புதற் குரியோன். 110. உடையாய் போற்றி யுணர்வே போற்றி கடையே னடிமை கண்டாய் போற்றி! பதப்பொருள் : உடையாய் போற்றி - எல்லாப் பொருள்களையும் உடையவனே வணக்கம், உணர்வே போற்றி - உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே வணக்கம், கடையேன் அடிமை - கடையேனுடைய அடிமையை, கண்டாய் போற்றி - கடைக்கணித்து ஏற்றுக்க கொண்டவனே வணக்கம். விளக்கம் : தேவர் முனிவர் முதலானவரும் இறைவனைக் காணத் தவம் செய்ய அவர்களுக்குத் தோன்றியருளாது, தமக்கு எளிவந்து ஆண்டருளியதை நினைத்து, "கடையேன் அடிமை கண்டாய்" என்றார். "உலவாக் காலம்" தவம் எய்தி உறுப்பும்
|