பக்கம் எண் :

திருவாசகம்
112


வெறுத்திங் குனைக்காண்பான் - பலமா முனிவர் நனிவாடப் பாவியேனைப் பணிகொண்டாய்" எனப் பின்னரும் அடிகள் கூறுவர்.

ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி! ;

பதப்பொருள் : ஐயா போற்றி - பெரியோனே வணக்கம், அணுவே போற்றி - நுண்ணியனே வணக்கம் சைவா போற்றி - சைவனே வணக்கம், தலைவா போற்றி - தலைவனே வணக்கம்.

விளக்கம் : சிவ சம்பந்தமுடையது சைவம்; அந்நெறியில் நிற்பவர் சைவர்; சிவபெருமான் திருவையாற்றில் சைவனாகி வந்த வரலாறு கீர்த்தித் திருவகவலில் குறிக்கப்பட்டது. அதனை உள்ளத்திற்கொண்டு ‘சைவா’ என்றார்,

குறியே போற்றி குணமே போற்றி

115. நெறியே போற்றி நினைவே போற்றி!

பதப்பொருள் : குறியே போற்றி - அனற்பிழம்பாகிய இலிங்க வடிவினனே வணக்கம், குணமே போற்றி - எண் குணங்கள் உடையவனே வணக்கம், நெறியே போற்றி - நல்வழியானவனே வணக்கம், நினைவே போற்றி - உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே வணக்கம்.

விளக்கம் : குறி - அடையாளம். சிவனுக்குரிய சிறந்த அடையாளம் இலிங்க வடிவமே. இவ்வடிவத்தைச் சிவபெருமான் பிரம விட்டுணுக்களுக்கு முதற்கண் காட்டியருளினான்.

எண்குணங்களாவன : தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை எனவிவை.

வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி!

பதப்பொருள் : வானோர்க்கு அரிய மருந்தே - தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே, போற்றி - வணக்கம், ஏனோர்க்கு - மற்றையோர்க்கு, எளிய இறைவா - எளிமையான இறைவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : மருந்து அரிதில் முயன்று பெறுவது. தேவர்கள் இறைவனை அரிதில் முயன்று பெறுகிறார்கள். ஆதலின், தேவர்களுக்கு இறைவன் மருந்தாயினான். இறைவன் அடியாரிடத்தில் விரும்பித் தங்கியிருக்கிறான். அதனால், அவர்கள் இறைவனை எளிதில் காண்கிறார்கள். இக்கருத்தை விளக்குவார்,