பக்கம் எண் :

திருவாசகம்
113


"வானோர்க்கரிய மருந்தே" என்றும், "ஏனோர்க் கெளிய இறைவா" என்றும் அடுக்கிக் கூறிய நயம் சிந்தித்து மகிழற்பாலது.

மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை
ஆழா மேயரு ளரசே போற்றி!

பதப்பொருள் : மூவேழ் சுற்றம் - இருபத்தொரு தலைமுறையில் வருகின்ற சுற்றத்தார், முரண் உறு நரகிடை - வலிய நரகத்தில், ஆழாமே - ஆழ்ந்து போகாமல், அருள் - அருள் செய்கின்ற, அரசே போற்றி - அரசனே வணக்கம்.

விளக்கம் : தந்தைவழி, தாய்வழி, மாமன்வழி என்ற மூவழியிலுமுள்ள ஏழு தலைமுறையார் மூவேழ் சுற்றமாவர். ஒருவர் இறைவன் திருவருளைப் பெற்றால், அவரால் இம் மூவழியினருக்கும் நன்மை உண்டாகிறது.

120. தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி!

பதப்பொருள் : தோழா போற்றி - தோழனே வணக்கம், துணைவா போற்றி - துணை புரிபவனே வணக்கம், வாழ்வே போற்றி - என்னுடைய வாழ்வானவனே வணக்கம், என் வைப்பே போற்றி - என் நிதியானவனே வணக்கம்.

விளக்கம் : தோழன் - ஒத்த உணர்ச்சியுடையவன், துணைவன் இரக்கத்தினால் உதவி செய்பவன். தோழனால் நல்வாழ்வு உண்டாகிறது; துணைவன் எய்ப்பினில் வைப்பாய் உதவி செய்கிறான். இதைச் செய்யுளின் அடுக்கில் பார்த்து மகிழ்க.

முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி யரனே போற்றி!

பதப்பொருள் : முத்தா போற்றி - இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே வணக்கம், முதல்வா போற்றி - தலைவனே வணக்கம், அத்தா போற்றி - அப்பனே வணக்கம், அரனே போற்றி - பாசத்தை அழிப்பவனே வணக்கம்.

விளக்கம் : ஆன்மாக்கள் இயல்பாகவே பாசத்தில் கட்டுப் பட்டவை; இறைவன் இவ்வாறன்றி இயல்பாகவே பாசங்களினின்று நீக்கியவன்; அதனால், "முத்தா" என்றார். எல்லா வற்றிற்கும் முதல்வன் தனக்கு ஒரு முதல்வனில்லான் ஆதலின், முதல்வா என்றார். அதுவே தன் வயத்தனாதல் தன்மையாம், முத்தனாயிருப்பதால் முதல்வனாகவும், முதல்வனாய் இருப்பதால் அத்தனாகவும், அத்தனாக இருப்பதால் அரனாகவும் இருக்கின்றான் என்பதாம்.