உரையுணர் விறந்த வொருவ போற்றி 125. விரிகட லுலகின் விளைவே போற்றி! பதப்பொருள் : உரை உணர்வு இறந்த - சொல்லையும் அறிவையும் கடந்த, ஒருவ போற்றி - ஒப்பற்றவனே வணக்கம், விரி கடல் உலகின் விளைவே - விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே, போற்றி - வணக்கம். விளக்கம் : உலகம் நிலையற்றது, துன்பமானது என்பது உலக வாழ்வின் அனுபவத்தால் உணரப்படுகிறது. அவ்வுணர்ச்சி இறைவன் நிலையானவன், இன்பமானவன் என்பதைத் தெரிந்து அவனை அடையத் தூண்டுகிறது. ஆகவே, உலக வாழ்வின் பயன் இறைவனாய் இருத்தலால், "விரிகடலுலகின் விளைவே" என்றார். அருமையி லெளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி! பதப்பொருள் : அருமையில் எளிய அழகே - அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே, போற்றி - வணக்கம், கருமுகில் ஆகிய கண்ணே - கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : யாவர்க்கும் அரியவனாதல், இறைவனது உண்மை நிலை. எளியவனாய் வருதல் அருள் நிலை. இவ்வருள் நிலை ஏனையோர்க்கு இன்றி அடியவர் பொருட்டேயாகும். அதனால், "அருமையில் எளிய அழகே" என்றார். உலகத்துக்கு மேகம் இன்றியமையாதது; ஆன்மாக்களுக்கு இறைவன் அருள் இன்றியமையாதது. அதனால் "கருமுகிலாகிய கண்ணே" என்றார். மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையு மொருவ னாக்கி இருங்கழல் 130. சென்னியில் வைத்த சேவக போற்றி! பதப்பொருள் : மன்னிய - நிலைபெற்ற, திருவருள் மலையே - பெருங்கருணை மலையே, போற்றி - வணக்கம், என்னையும் ஒருவன் ஆக்கி - என்னையும் ஓர் அடியவனாக்கி, இருங்கழல் - பெருமையாகிய திருவடியை, சென்னியில் வைத்த - என் தலையில் வைத்த, சேவக - வீரனே, போற்றி - வணக்கம். விளக்கம் : எல்லாப் பொருளும் நிலையற்றவை; இறைவனது திருவருள் ஒன்றே நிலையானது; இறைவன் அத்திருவருளே வடிவமானவன்; அதனால், "மன்னிய திருவருள் மலையே" என்றார். பின்பு, அடிகள் தமக்குத் திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக வந்து திருவடித்தீக்கை செய்தமையைக் குறிப்பிட்டார்.
|