பக்கம் எண் :

திருவாசகம்
115


தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி!

பதப்பொருள் : தொழுத கை - வணங்கிய கையினரின், துன்பம் துடைப்பாய் - துன்பங்களை நீக்குவோனே, போற்றி - வணக்கம், அழிவிலா - அழிவில்லாத, ஆனந்த வாரி - இன்பக் கடலே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : கை - சினையாகுபெயர், கையையுடையார்க்கு ஆயிற்று. இறைவன் இன்பம் அழிவற்றது; கடல் போன்று அளவில்லாதது, அதனால், "அழிவிலா ஆனந்த வாரி" என்றார்.

அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி
முழுவது மிறந்த முதல்வா போற்றி!

பதப்பொருள் : அழிவதும் ஆவதும் - ஒடுக்கமும் தோற்றமும், கடந்தாய் - கடந்தவனே, போற்றி - வணக்கம், முழுவதும் இறந்த முதல்வா - எல்லாம் கடந்த முதல்வனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : எல்லாப் பொருள்களும் தோற்ற ஒடுக்கங்களை உடையன; இறைவனுக்கு அவை இல்லையாதலின், "அழிவதும் ஆவதும் கடந்தாய்" என்றும், இறைவன் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவனாதலின், "முழுவதும் இறந்த முதல்வா" என்றும் கூறினார்.

135. மானேர் நோக்கி மணாளா போற்றி
வானத் தமரர் தாயே போற்றி!

பதப்பொருள் : மான் நேர் நோக்கி - மானை நிகர்த்த நோக்கத்தை யுடைய உமா தேவியின், மணாளா போற்றி - மணவாளனே வணக்கம், வானகத்து - விண்ணுலகத்திலுள்ள, அமரர் தாயே - தேவர்களுக்குத் தாய் போன்றவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : இறைவன் தனது பேரானந்தத்தை இறைவியினது கடைக்கண் நோக்கின் மூலமாக உயிர்களுக்கு வழங்குகின்றான் என்பதைக் குறிக்க, "மானேர் நோக்கி மணாளா" என்றும், தேவர்கள் ஆலகால விடத்தினால் அழியாதபடி அதனை உண்டு அவர்களைக் காப்பாற்றினான் என்பார், "வானகத்தமரர் தாயே" என்றும் கூறினார்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

140. வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவ ருள்ளத் தமுதே போற்றி!