பதப்பொருள் : பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் - பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே, போற்றி - வணக்கம், நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் - நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்திருப்பவனே, போற்றி - வணக்கம், தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் - நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே, போற்றி - வணக்கம், வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் - காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்திருப்பவனே, போற்றி - வணக்கம், வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் - ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியனனே, போற்றி - வணக்கம், அளிபவர் உள்ளத்து அமுதே - கனிபவருடைய மனத்தில் அமுதமாயிருப்பவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்தும் ஐந்து பூதங்களின் தன்மைகளாக அமைந்துள்ளன. இவை முறையே சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் என்றும் கூறப்படும். நிலத்தின் கண் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்து தன்மைகளும் உள்ளன. நீரின்கண் நாற்றம் தவிர ஏனைய நான்கு தன்மைகளும் உள்ளன. தீயின்கண் சுவையும், நாற்றமும் தவிர ஏனைய மூன்று தன்மைகளும் உள்ளன. காற்றின்கண் ஓசை, ஊறு என்னும் இரண்டு தன்மைகள் உள்ளன. ஆகாயத்தில் ஓசை என்னும் ஒரு தன்மையே உள்ளது. இதனையே "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய்" என்பது முதல் "வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்" என்பது ஈறாகக் கூறினார். சடப்பொருள்கள் அனைத்திலும் அதனதன் தன்மைகளாகக் கலந்துள்ள இறைவன் சித்துப் பொருளாகிய உயிர்களின் உள்ளத்திலும் கலந்திருக்கின்றான். அக்கலப்பில் அன்பர்கள் உள்ளத்து அமுதமாய் இனிக்கின்றான் என்பார், "அளிபவர் உள்ளத்து அமுதே" என்றார். கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி! பதப்பொருள் : கனவிலும் - சொப்பனத்திலும், தேவர்க்கு அரியாய் - தேவர்கட்கு அருமையானவனே, போற்றி - வணக்கம்; நாயேற்கு நனவிலும் அருளினை - நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : தேவர் பதவி இன்ப நோக்குடையதாகலின், இறை நினைவு அரிதாம். நினைவில் இல்லாத பொருள் கனவில் தோன்றாது. ஆதலின், "கனவிலும் தேவர்க்கு அரியாய்" என்றார். அடிகளுக்குத் திருப்பெருந் துறையிலே, அருளியது விழிப்பது நிலையிலேயாதலின் "நாயேற்கு நனவிலும் அருளினை" என்றார்.
|