பக்கம் எண் :

திருவாசகம்
125


பதப்பொருள் : சந்தனச் சாந்தின் சுந்தர - சந்தனக் குழம்பை அணிந்த அழகனே, போற்றி - வணக்கம், சிந்தனைக்கு அரிய சிவமே - நினைத்தற் கரிய சிவமே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : "சந்தனச் சாந்தின் சுந்தர" என்றது, கூத்தப் பெருமானது சந்தனக்காப்புக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து கூறியது என்னலாம்.

205. மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி!

பதப்பொருள் : மந்திரம் மாமலை மேயாய் - மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே, போற்றி - வணக்கம், எம்மை உய்யக் கொள்வாய் - எங்களை உய்யும்படி ஆட்கொள்வேனோ, போற்றி - வணக்கம்.

விளக்கம் : ‘மகேந்திர மலையில் எழுந்தருளியிருந்து வீட்டு நூலை அருளிய இறைவனே எங்களுக்கு வீடு பேற்றை அருள வேண்டும்" என்பார், "எந்தமை உய்யக் கொள்வாய்" என்றார்.

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி!

பதப்பொருள் : புலிமுலை புல்வாய்க்கு அருளினை - புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே, போற்றி - வணக்கம், அலைகடல் மீமிசை நடந்தாய் - அசையாநின்ற கடலின்மேல் நடந்தவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : புலிமுலை புல்வாய்க்கு அருளியது: பண்டொருகாற்பாண்டி நாட்டில் ஒரு கடப்பங்காட்டில் தனித்து வாழ்ந்து வந்த பெண் மான் ஒன்று, தன் குட்டியை ஒரு புதரில் மறைத்து வைத்து நீர் பருகச் சென்றது. அப்பொழுது ஒரு வேடன் அதை ஓர் அம்பால் எய்து வீழ்த்தினான். அது தன் குட்டியை நினைந்து உயிர்விட்டது. தாயை இழந்த குட்டிக்கு இறைவனருளால் அக்காட்டிலிருந்த ஒரு பெண் புலி, பால் கொடுத்து வளர்த்தது. (பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற்புராணம்) புல்வாய் - மான்.

அலைகடல் மீமிசை நடந்தது : கடலினைக் கலக்கி வலைஞரைத் துன்புறுத்திய ஒரு பெரிய மீனை இறைவன் வலைஞர் கோலத்தில் வந்து பிடித்த வரலாற்றினைக் குறித்தது.

கருங்குரு விக்கன் றருளினை போற்றி

210. இரும்புலன் புலர இசைந்தனை போற்றி!

பதப்பொருள் : கருங்குருவிக்கு அன்று அருளினை - கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே, போற்றி - வணக்கம்,