இரும்புலன் புலர இசைந்தனை - வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : கருங்குருவிக்கருளியது : முன்னொரு காலத்தில் கரிக் குருவி ஒன்று காக்கைகளால் துன்புறுத்தப்பட்டு வருந்தியது. அக்குருவி தினந்தோறும் மதுரை ஆலயத்தில் பொற்றாமரைத் தடாகத்தில் மூழ்கி ஆலவாய் அண்ணலை வலம் வந்து வழிபட்டது. இறைவன் அக்கரிக் குருவிக்கு இரங்கி மந்திரோபதேசம் செய்தான். அதனால் தானும் தன் கிளையும் துன்பம் நீங்கி இன்பம் பெற்றது. (திருவிளையாடற்புராணம் - கரிக்குருவிக்கு உபதேசித்த படலம்) இறையின்பத்தை அடைந்தவர்களுக்கு ஐம்புல இன்பங்கள் இன்பமாகத் தோன்றாதொழியும். அந்நிலையை அடியார்க்கு அருளுபவன் என்பார், "இரும்புலன் புலர இசைந்தனை" என்றார். படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவீ றானாய் போற்றி! பதப்பொருள் : படி உற பயின்ற பாவக - நிலத்தின்கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்றமுடையவனே, போற்றி - வணக்கம், அடியொடு நடு ஈறானாய் - உலகத்திற்கெல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : "படியுறப் பயின்ற பாவக" என்றது "சேவகனாகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலப்பல காட்டிய பரிசினை"க் குறித்தது என்பர். நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் பரகதி பாண்டியற் கருளினை போற்றி! பதப்பொருள் : நரகொடு சுவர்க்கம் நால்நிலம் புகாமல் - நரகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி, பாண்டியற்குப் பரகதி அருளினை - பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கியருளியவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : பரகதி பாண்டியற்கு அருளியது : இது மலயத்துவச பாண்டியனுக்கு மகளாராய் அவதரித்த தடாதகைப்பிராட்டியாரை மணந்து, அவ்வரசனைத் தேவருலகிலிருந்து பூவுலகுக்கு வரவழைத்து, எழுகடலில் மூழ்குவித்து, வீடு பேற்றினை நல்கிய திருவிளையாடலைக் குறித்தது. (திருவிளையாடற்புராணம் - மலயத்துவசனை அழைத்த படலம்). நானிலம் ஆவன - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. 215. ஒழிவற நிறைந்த வொருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி!
|