பக்கம் எண் :

திருவாசகம்
127


பதப்பொருள் : ஒழிவு அற நிறைந்த ஒருவ - எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே, போற்றி - வணக்கம், செழுமலர்ச் சிவபுரத்து அரசே - செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : எங்கும் நிறைந்துள்ள பொருளாகிய இறைவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளி வந்து அருள் செய்தமையைக் குறித்தார். சிவபெருமான் பல அடியார் குழாத்துடன் வெளிப்பட்டு வீற்றிருந்தமையால், திருப்பெருந்துறையைச் "சிவபுரம்" என்றார்.

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி!

பதப்பொருள் : கழுநீர் மாலை கடவுள் - செங்கழுநீர் மாலையை யணிந்த கடவுளே, போற்றி - வணக்கம், தொழுவார் மையல் துணிப்பாய் - வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : திருப்பெருந்துறையில் இறைவன் குருவாய் எழுந்தருளி வந்தபொழுது செங்கழுநீர் மாலையை அணிந்திருந்தமை பற்றி, "கழுநீர் மாலைக் கடவுள்" என்றார். இதனை, ‘காதலனாகிக் கழுநீர் மாலை - ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும்’ என அடிகள் முன்பும் குறித்தது காண்க.

தன் பற்றையே பற்றுவார்க்கு இறைவன் உலகப் பற்றை நீக்குவான் என்பார், "தொழுவார் மையல் துணிப்பாய்" என்றார்.

பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

220. குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி!

பதப்பொருள் : பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் - தவறு யாது, பொருத்தம் யாதென்று அறியாத நாயினேன், குழைத்த சொல் மாலை - குழைந்து சொன்ன சொல் மாலையை, கொண்டருள் - கொண்டருள வேண்டும், போற்றி - வணக்கம்.

விளக்கம் : அறிவால் சிவனேயாகிய அடிகள் தமது பணி வுடைமையால், பிழைப்பு வாய்ப்பொன்று அறியாதவன் என்றும் தமது சொல்மாலையைக் கொண்டருள வேண்டும் என்றும் வேண்டுகிறார். பிழைப்பு வாய்ப்பு - நன்மை தீமை.

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி!

பதப்பொருள் : புரம்பல எரித்த புராண - திரிபுரங்களை யெரித்த பழையோனே, போற்றி - வணக்கம், பரம்பரம் சோதி பரனே - மேலான ஒளியையுடைய மேலோனே, போற்றி - வணக்கம்.