விளக்கம் : "புரம்" என்பது அஞ்ஞானத்தையும் "சோதி" என்பது மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கும். ஆகவே, இறைவன் மெய்ஞ்ஞானத்தினால் அஞ்ஞானத்தை அழிப்பவன் என்பதாம். புரம பல எரித்த வரலாறு முன்னர்க் கூறப்பட்டது. போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண 225. போற்றி போற்றி சயசய போற்றி! பதப்பொருள் : புயங்கப் பெருமான் - பாம்பையணிந்த பெரியோனே, போற்றி போற்றி - வணக்கம் வணக்கம், புராண - பழமையானவே, காரண - எல்லாவற்றிற்கும் மூல காரணனே, போற்றி போற்றி - வணக்கம் வணக்கம், சயசய - வெற்றியுண்டாக வெற்றியுண்டாக, போற்றி போற்றி போற்றி - வணக்கம், வணக்கம், வணக்கம். விளக்கம் : வணங்கங்கூற எடுத்துக்கொண்ட இத்திரு அகவலில், பலவாறு வணக்கங்கூறி வந்த அடிகள், இறுதியில், "வணக்கம்" என்பதனைப் பல முறை அடுக்கிக் கூறி முடித்தார்.
|