பக்கம் எண் :

திருவாசகம்
214


மன்ன எம்பிரான் வருக என்எனை
மாலும் நான்முகத் தொருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என்எனை
முழுதும் யாவையும் இறுதி உற்றநாள்
பின்ன எம்பிரான் வருக என்எனைப்
பெய்க ழற்கண்அன் பாயென் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என்எனைப்
பாவ நாசநின் சீர்கள் பாடவே.

பதப்பொருள் : மன்ன - மன்னனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; மாலும் நான்முகத்து ஒருவனும் - திருமாலும் நான்கு திருமுகங்களுடைய ஒப்பற்றவனாகிய பிரமனும், யாரினும் - மற்றுமுள்ள எல்லாரினும், முன்ன - முன்னோனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; முழுதும் யாவையும் - எல்லாப் பொருள்களும், இறுதி உற்ற நாள் - முடிவை அடைந்த காலத்தில், பின்ன - பின்னவனாயிருப்பவனே, எம்பிரான் - எம் தலைவனே, எனை வருக என் - என்னை வருக என்பாய்; பெய்கழற்கண் அன்பாய் - வீரக் கழலணிந்த திருவடிக்கண் அன்புடையேனாய், என் நாவினால் பன்ன - என் வாயினால் உன்னைப் பேசவும்; எம்பிரான் - எம் தலைவனே, பாவநாச - பாவத்தை ஒழிப்பவனே, நின் சீர்கள் பாட - உன் பெருமைகளைப் பாடவும், எனை வருக என் - என்னை வருக என்பாய்.

விளக்கம் : மன்ன, முன்ன, பின்ன - மூன்றும் விளிகள். 'வாயாரப் பன்னியாதரித்தேத்தியும் பாடியும் வழிபடுமதனாலே' என்ற திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பன்னுதலும் பாடுதலும் கூறப்பட்டன. இரண்டும், இறைவனது பெருமையைப் பாடத் தம்மை அழைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார், 'வருக என்எனைப் பாவநாச நின் சீர்கள் பாடவே' என்றார். இறைவன் தம்மை இன்றியமையாது தன்னிடம் அழைத்துக் கொள்ளல் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுதற்கு, 'வருக என் எனை' என்று ஒவ்வொரு தொடரிலும் கூறினார்.

இதனால், இறைவனை அவன் அருகிருந்து துதிப்பதையே உண்மை அடியார்கள் விரும்புவார்கள் என்பது கூறப்பட்டது.

99

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடும் நின்கழற் போது நாயினேன்