6. நீத்தல் விண்ணப்பம் (உத்தரகோச மங்கையில் அருளிச் செய்தது) 'நீத்துவிடாதே' என்று இறைவனிடம் முறையிட்டுக்கொள்வது நீத்தல் விண்ணப்பமாம். இப்பகுதி ஐம்பது பாடல்களால் ஆகியது. அடிகள் தமக்கு இறைவன் தன் ஞானாசிரியக் கோலத்தை மீண்டும் உத்தரகோச மங்கையில் காட்டியருள வேண்டும் என்று கருதியவாறு அவன் காட்டியருளாமையையே தம்மை அவன் கைவிட்டதாகக் கருதி, வருந்தி இவ்விண்ணப்பத்தைச் செய்தருளினார். இதன் பின் இறைவன் அடிகள் விரும்பியவாறே தன் ஞானாசிரியக் கோலத்தை அவருக்கு அங்குக் காட்டியருளினான். பிரபஞ்ச வைராக்கியம் அஃதாவது, உலகப்பற்றை விடுதலாம். திருச்சதகத்தில் அடிகள் இறைவனிடம் தமக்குள்ள அன்பினைப் பல வகையில் தெரிவித்தார். இதில் தமக்கு உலகத்தில் பற்று இல்லை என்பதை விளக்குகிறார். திருச்சிற்றம்பலம் கட்டளைக்கலித்துறை கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. பதப்பொருள் : கடையவனேனை - கடையேனை, கருணையினால் - பெருங்கருணையால், கலந்து - வலிய வந்தடைந்து, ஆண்டு கொண்ட - ஆண்டுகொண்டருளின, விடையவனே - இடப வாகனனே, விட்டிடுதி - அடியேனை விட்டிடுவாயோ? விறல் - வலிமையுடைய, வேங்கையின் தோல் - புலித்தோலாகிய, உடையவனே - ஆடையை உடுத்தவனே, மன்னும் - நிலை பெற்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு - அரசே - தலைவனே, சடையவனே - சடையையுடையவனே, தளர்ந்தேன் - சோர்ந்தேன்; எம் பிரான் - எம் பெருமானே, என்னைத் தாங்கிக்கொள் - என்னைத் தாங்கிக்கொள்வாயாக. விளக்கம் : 'விட்டிடுதி' என்றதில் விட்டுவிடுவாயோ என்ற வினாப்பொருளைத் தரும் ஓகாரம் எச்சமாய் நின்றது. கண்டாய் - அசை. கடையேனைக் கருணையினால் கலந்து ஆண்டது போலக்
|