பக்கம் எண் :

திருவாசகம்
217


கருணையாலே தாங்கிக்கொள்ள வேண்டும் என்பார், 'தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே' என்றார்.

வேங்கையின் தோலை அணிந்தது : தாருகா வனத்து முனிவர் கொடிய வேள்வி ஒன்று இயற்றி, அதனின்றும் தோன்றிய புலியை ஏவி இறைவனை அழிக்க முயன்றனர். இறைவன் அப்புலியைக் கொன்று, அதன் தோலை உடுத்தருளினான்.

இதனால், இறைவன் தான் ஆட்கொண்ட அடியார்களைப் பின்னும் தன் கருணையினால் தாங்கிக்கொள்கிறான் என்பது கூறப்பட்டது.

1

கொள்ஏர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண் டாண்டதெக் காரணமே.

பதப்பொருள் : உத்தரகோச மங்கைக்கு அரசே - உத்தர கோச மங்கைக்குத் தலைவனே, கள்ளேன் - கள்வனாகிய நான், ஒழிய - உன்னை நீங்கி நிற்க, கண்டுகொண்டும் - பார்த்தும், ஆண்டது - என்னை அடிமை கொண்டது, எக்காரணம் - எக்காரணத்தைக் கொண்டோ! (அறிகிலேன்; ஆனால் இப்போது) நின் விழுத்தொழும்பின் உள்ளேன் - உன்னுடைய மேலாகிய தொண்டில் உள்ளேன்; புறம் அல்லேன் - அடியேன் புறத்தேன் அல்லேன்; (ஆதலால்) கொள் ஏர் - அழகினைக்கொண்ட, பிளவு அகலா - இடை விட்டு நீங்காது நெருங்கியிருக்கிற, தடங்கொங்கையர் - பெரிய கொங்கைகளையுடைய மாதராரது, கொவ்வைச்செவ்வாய் - கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினை, விள்ளேன் எனினும் - விடேனாயினும், (அதுபற்றி) விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : கள்வனாகிய யான் புறமே திரிந்த காலத்தில் உனது கருணையினாலன்றி எக்காரணத்தைக்கொண்டு அடிமை கொண்டாய் என்று வினவுவார், 'கள்ளேன் ஒழியவும் கண்டு கொண்டாண்டது எக்காரணமோ?' என்றார். ஆனால், இப்போது புறமே செல்லாது திருவருட்பணியிலே நிற்பதால் மாதராராசையால் மயங்கிக் கிடந்தாலும் தள்ளி விடலாகாது என்பார், 'உள்ளேன் புறமல்லேன் விடுதி கண்டாய்' என்றார்.

இதனால், இறைவன் தன்னால் ஆட்கொள்ளப்பட்டவரை அவரது சிறு குற்றம் நோக்கி நீக்குவானல்லன் என்பது கூறப்பட்டது.

2

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.