பக்கம் எண் :

திருவாசகம்
251


விட்டுவிடுவாயோ! விடில் - விட்டுவிடில், மிக்கார் - மேலோர், என்னை - என்னை நோக்கி, ஆர் அடியான் என்னில் - யாருடைய அடியார் என்று கேட்டால், உத்தரகோச மங்கைக்கு அரசின் - திருவுத்தரகோச மங்கைக்கு வேந்தனாகிய சிவபிரானது, சீர் அடியார் - சிறப்புடைய அடியாருக்கு, அடியான் என்று - அடியவன் என்று சொல்லி, நின்னைச் சிரிப்பிப்பன் - அவர்கள் உன்னைச் சிரிக்கும்படி செய்வேன்.

விளக்கம் : மண்டை ஓடு வெண்மையாய் உள்ளமையால் 'தாரகை போலும்' என்றார். பாம்பு வேள்வித் தீயில் தோன்றினமையால், 'தழலரவு' என்றார். தலைமாலையும், தழலரவும் அணியாகக் கொண்டது, இறைவனது வீரத்தைக் காட்டுகின்றதாதலின், 'வீர' என விளித்தார். வீரனாதலால் கைவிடமாட்டான் என்பதாம். 'சிரிப்பிப்பன்' என்பது, இகழ்ச்சி தோன்றக் கூறியதாம்.

இதனால், இறைவனது பேராற்றல் கூறப்பட்டது.

48

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன்என் றேசுவனே.

பதப்பொருள் : என்னை விடுதி - என்னை நீ விட்டுவிடுவாயோ, விடின் - விட்டுவிட்டால், சீறும் பிழைப்பை - என்னை நீ சினந்து தள்ளிய குற்றத்தை, சிரிப்பிப்பன் - பிறர் நகையாடும்படி செய்வேன், தொழும்பையும் - எனது தொண்டையும், ஈசற்கு என்று விரிப்பிப்பன் - ஈசனுக்கே என்று எல்லாரும் சொல்லும்படி செய்வேன், வெங்கரியின் உரிப்பிச்சன் - கொடிய யானையின் தோலைப் பூண்ட பித்தன், தோல் உடைப்பிச்சன் - புலித்தோல் ஆடையணிந்த பித்தன், நஞ்சு ஊண் பிச்சன் - விடத்தை உண்ட பித்தன், ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் - ஊர்ச் சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன், என்னையும் ஆளுடைப் பிச்சன் - என்னையும் அடிமையாகக் கொண்ட பித்தன், என்று ஏசுவன் - என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன்.

விளக்கம் : இறைவன் அடிகளை ஆண்டுகொண்ட பிறகு சினந்து நீங்குதல் கூடாமையால், 'சீறும் பிழைப்பைச் சிரிப்பிப்பன்' என்றார். அடியவனை ஆதரவின்றி அலையச் செய்தல் ஆண்டானுக்கே இகழ்ச்சியாதலின், 'தொழும்பையும் ஈசற்கென்று விரிப்பிப்பன்' என்றார். இவை பிறர் ஏசுவதற்குத் தாம் கூறியபடியாம்.

இனி, 'இந்நிலையில் ஆட்கொள்ளாது விடுவையாயின் யானே உன்னை ஏசுவன்' என்றார், 'வெங்கரியின் உரிப்பிச்சன்' என்றெல்லாம் கூறினார். ஆனால், இது ஏசுவது போலப் புகழ்தலாம். 'பித்தா' எனச் சுந்தரர் பாடியதையும் ஒப்பிட்டுக்கொள்க.