இதனால், அடியவர்கள் எவ்வாறிப்பினும் அவர்களை ஆட்கொள்ள வேண்டுவது ஆண்டவனது கடமை என்பது கூறப்பட்டது. 49 ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின் தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே. பதப்பொருள் : செம்பவள வெற்பின் - செந்நிறமுடைய பவளமலை போன்ற, தேசு உடையாய் - ஒளியுடைய திருமேனியனே, என்னை ஆள் உடையாய் - என்னை அடிமையாக உடையவனே, சிறு உயிர்க்கு இரங்கி - சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய தேவர்களுக்கு இரங்கி, அமுது உண்ண - அவர்கள் அமுதம் உண்ணுதற்பொருட்டு, காய்சினம் - கொல்லும் வேகத்தோடு எழுந்த, ஆலம் உண்டாய் - ஆலகால விடத்தை உண்டவனே, கடையவன் யான் - கடைப்பட்டவனாகிய நான், உன்னை ஏசினும் - உன்னை இகழ்ந்து பேசினாலும், ஏத்தினும் - வாழ்த்தினாலும், என் பிழைக்கே - எனது குற்றத்தின் பொருட்டே, குழைந்து - மனம் வாடி, வேசறுவேனை - துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : இரக்கம் காரணமாக அமுது உண்ணவேண்டியவன் கொடிய நஞ்சை உண்டான் என்பார், 'சிற்றுயிர்க்கிரங்கி அமுதுண்ணக் காய்சின ஆலமுண்டாய்' என்றார். ஏசுதல், 'வெங்கரியின் உரிப்பிச்சன்' என்பது முதலான ஏசுதலாம். ஏத்துதல், 'தழலரப் பூண் வீர' என்பது முதலாக ஏத்துதலாம். செய்த குற்றத்துக்கு வருந்துவது, 'பிழைக்கே குழைவதாம்.' இதனால், குற்றத்தை எண்ணி வருந்தினால் மன்னிப்பான் என்பது கூறப்பட்டது. 50 திருச்சிற்றம்பலம்
|