7. திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளிச்செய்தது) எம்பாவாய் என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் முடிகின்றமை யால், இப்பகுதி திருவெம்பாவை என்னும் பெயருடையதாயிற்று. திரு என்பது அடைமொழி, மார்கழி மாதத்தில் சில பெண்கள் தம்முள் கூடிப் பிற பெண்களின் இல்லந்தோறும் சென்று, அவர்களையும் எழுப்பிக்கொண்டு குளத்துக்கு நீராடச் செல்லும் வழக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது இப்பகுதி. பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவனது அருள் நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாகத் தத்துவப் பொருள் கொள்வர். ‘மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள் செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவை’ என்ற திருப்பெருந்துறைப் புராணத்தைக் காண்க. இனி, உலக சிருட்டியில் மனோன்மணி, சர்வபூததமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என்னும் ஒன்பது சத்திகள் தம்முள் முன்னின்ற சத்தி பின்னின்ற சத்தியைத் துயிலெழுப்புவதாகவும், எல்லோரும் கூடி இறைவனைப் பாடுவதாகவும் அமைந்துள்ளது இப்பகுதி என்றும் கூறப்பெறும். சத்தியை வியந்தது அஃதாவது, திருவருளைப் புகழ்தலாம். சத்தியாவது அருள். ‘அருளது சத்தியாகும்’ என்பது சிவஞானசித்தி. திருவருள் பெற்ற பின்னரே இறைவனை அடைய வேண்டுமாகையால், திருவருள் வணக்கம் அவசியமாகிறது. அம்மையப்பனாக இறைவனை வழிபடுவது இம்முறை பற்றியேயாம். வெண்டளையால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
|