பக்கம் எண் :

திருவாசகம்
254


பதப்பொருள் : வாள் தடங்கண் மாதே - ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, ஆதியும் அந்தமும் இல்லா - முதலும் முடிவும் இல்லாத, அரும்பெருஞ்சோதியை - அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை, யாம் பாடக் கேட்டேயும் - நாங்கள் பாடுவதைக் கேட்டும், வளருதியோ - உறங்குகின்றனையோ? நின் செவி - உன் காது, வன்செவியோ - ஓசை புகாத வலிய காதோ, மாதேவன் - மகாதேவனுடைய, வார்கழல்கள் - நெடிய சிலம்பணிந்த திருவடிகளை, வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் - நாங்கள் புகுந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் அளவிலேயே, எம் தோழி - எங்கள் தோழி ஒருத்தி, விம்மி விம்மி - பொருமி அழுது, மெய் மறந்து - உடம்பை மறந்து, போது ஆர் - மலர் நிறைந்த, அமளியின் மேனின்றும் - படுக்கையின் மீதிருந்து, புரண்டு - புரண்டு விழுந்து, இங்ஙன் - இந்நிலத்தே, ஏதேனும் ஆகாள் கிடந்தாள் - ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள், ஈதே பரிசு - இஃது அவள் தன்மை, என்னே என்னே - என்ன வியப்பு!

விளக்கம் : இருளில் உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்கு ஒளியைத் தருபவனாதலின், இறைவனைச் ‘சோதி’ என்றும், உலகத்தில் காணப்படும் ஒளியைப் போலத் தோன்றி மறையக் கூடியது அன்றாதலின், ‘ஆதியும் அந்தமும் இல்லா’ என்றும், அஃது அடைவதற்கு அருமையானது; ஆனால், அடைந்தால் பெருமை தரக்கூடியதாதலின், ‘அரும்பெருஞ்சோதி’ என்றும் கூறினார். வளர்தல் - கண் வளர்தல்; உறங்குதல். ‘வார்கழல்கள்’ என்றமையால், இறைவனது கருணைச் சிறப்பு விளங்குகிறது.

இறைவனது புகழைக் கேட்டும் பக்குவம் பெறவில்லை யாதலின், எழுப்பப்பட்ட பெண் தூங்கினாள் என்பது, ‘யாம்படக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ?’ என்றதனாலும், மற்றொரு தோழி பக்குவம் பெற்றிருந்தாளாதலின், இறைவன் நாமத்தை வீதிவாய்க் கேட்டலுமே தன் வசமிழந்து கிடந்தாள் என்பது, ‘விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேனின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்’ என்றதனாலும் விளங்குகின்றன.

‘ஏலோரெம்பாவாய்’ என்பது அசை. ‘ஏல் ஓர் எம்பாவாய்’ எனப் பிரித்து, ஏற்பாயாக, ஆய்வாயாக, எம்பாவை போல்வாளே’ என்று பொருள் கூறுவாருமுளர். இப்பாடல் முதல் எட்டுப் பாடல்கள் முடியப் பெண்கள் நீராடச் செல்லும்போது ஒருவரையொருவர் எழுப்பிச் செல்வனவாய் அமைந்துள்ளன.

இதனால், பக்குவம் நிறைந்தோர் இறைவனது நாமத்தைக் கேட்டவுடன் தம்மை மறந்து இருப்பர் என்பது கூறப்பட்டது.

1