பக்கம் எண் :

திருவாசகம்
257


துயில் எழுப்பப்பட்ட பெண் சிறந்த அன்புடையவளாதலின், ‘எத்தோ நின் அன்புடைமை’ என்றார்கள். சித்தத்தைச் சிவன்பாலே வைத்திருப்போர், ‘சித்தம் அழகியார்’ ஆவர். உறங்கினவளை எழுப்பியது, தங்களோடு உடன் சேர்ந்து இறைவனைப் பாடுதற்பொருட்டே என்பதை விளக்க, ‘இத்தனையும் வேண்டும் எமக்கு’ என்றனர்.

இதனால், இறைவன் திருநாமம் கூறுவார்க்கு இனிமை பயக்கும் என்பது கூறப்பட்டது.

3

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : ஒள்நித்தில நகையாய் - ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய், இன்னம் புலர்ந்தின்றோ - இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா? (என்று எழுப்பியோர் கூற, எழுப்பப்பட்டவள் கூறுவாள்) வண்ணக் கிளி மொழியார் - அழகின் கிளி போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லாரும் வந்தாரோ - எல்லோரும் வந்து விட்டார்களோ? (என்று எழுப்பப்பட்டவள் கூற, எழுப்பியோர் கூறுவர்) எண்ணிக்கொடு - எண்ணிக்கொண்டு, உள்ளவா சொல்லுகோம் - உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அவ்வளவும் - அத்துணைக்காலமும், கண்ணைத் துயின்று - நீ கண்ணுறங்கி, அவமே - வீணே, காலத்தைப் போக்காதே - காலத்தைக் கழிக்காதே, விண்ணுக்கு ஒரு மருந்தை - தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேத விழுப்பொருளை - வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனியானை - கண்ணுக்கு இனிய காட்சி தருவானை, பாடி - புகழ்ந்து பாடி, உள்ளம் கசிந்து - மனங்குழைந்து, உள் நெக்கு நின்று உருக - உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன்பொருட்டு, யாம் மாட்டோம் - நாங்கள் எண்ணிச் சொல்ல மாட்டோம், நீயே வந்து - நீயே எழுந்து வந்து, எண்ணி - எண்ணிப் பார்த்து, குறையில் - எண்ணிக்கை குறையுமானால், துயில் - மீண்டும் போய்த் தூங்குவாயாக.

விளக்கம் : இதுவும் உரையாடலாயுள்ளது. எப்பொழுதும் சிரித்த முகத்தை உடையவள் என்பதைக் காட்ட, ‘ஒள் நித்தில