பக்கம் எண் :

திருவாசகம்
273


எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க, கங்குல் பகல் - இரவும் பகலும், எம் கண் - எம் கண்கள், மற்று ஒன்றும் காணற்க - உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க, இங்கு இப்பரிசே - இந்நிலவுலகில் இம்முறையே, எங்கோன் - எங்கள் ஐயனே, எமக்கு நல்குதியேல் - நீ எங்களுக்கு அருளுவாயாயின், ஞாயிறு எங்கு எழில் எமக்கு என் - சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

விளக்கம் : தாயே தன் பிள்ளையைக் காத்துக்கொள்வாள் ஆதலின், அவளிடத்தில் அவள் பிள்ளையை அவளுக்கு அடைக்கலம் என்று பிறர் சொல்லுதல் மிகையாகும். அது போலக் கன்னிப்பெண்கள் இறைவனிடம் தங்களை அவனுக்கு அடைக்கலம் என்று சொல்லுதல் மிகையாம் என்றபடி, அங்கு - அசை. ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்பது போல’ என்பது அக்காலத்தில் வழங்கிய ஒரு பழமொழி என்பது இங்கு அறியப்படுகின்றது. ஆகவே, ‘உங்கை’ என்பது, மரூஉ மொழியாம்.

அன்பர் பணியும் அரன் பணியும் வேறன்றாதலின், அடியார் சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் என்று முன்னரும், இறைவனுக் கல்லாது எப்பணியும் செய்ய மாட்டோம் என்று இங்கும் கூறியது ஒன்றுக் கொன்று முரணாகாது என்று அறிக. வேண்டுகோள் எதிர்மறையாய் இருத்தல் உரிமை பற்றியும் உறுதி பற்றியுமாம். பெண்டிர் பலரும் இறைவனை வேண்டிப் பாடினர்.

இதனால், இறை பணி நிற்பாரது உறுதி கூறப்பட்டது.

19

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : நின் - உனது, ஆதி ஆம் - எப்பொருளுக்கும் முதலாயுள்ள, பாதமலர் - திருவடி மலருக்கு, போற்றி - வணக்கம், அருளுக - அவை எமக்கு அருள் செய்வனவாக; நின் - உனது, அந்தம் ஆம் - எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர்கள் - செந்தளிர் போலும் திருவடிகளுக்கு, போற்றி - வணக்கம், அருளுக - அவை எமக்கு அருள் செய்வனவாக; எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும், தோற்றமாம் - தோன்றுதற்குக் காரணமாகிய, பொன் பாதம் - பொன் போன்ற