திருவடிகளுக்கு, போற்றி - வணக்கம்; எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும், போகம் ஆம் - நிலை பெறுதற்குரிய பாதுகாப்பாகிய, பூங்கழல்கள் - அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு, போற்றி - வணக்கம்; எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும், ஈறாம் இணை அடிகள் - முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டுக்கும், போற்றி - வணக்கம்; மால் நான்முகனும் காணாத - திருமாலும் பிரமனும் காணவொண்ணாத, புண்டரிகம் - திருவடித்தாமரை மலருக்கு, போற்றி - வணக்கம்; யாம் உய்ய - நாம் உய்யும்படி, ஆட்கொண்டருளும் - அடிமை கொண்டருள்கின்ற, பொன் மலர்கள் - பொற்றாமரை மலர் போலும் திருவடிகளுக்கு, போற்றி - வணக்கம்; போற்றி - என்று இறைவனை வணங்கி, யாம் மார்கழி நீர் ஆடு - நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக. விளக்கம் : முதற்பாட்டில், இறைவன் தனக்கு முதலும் முடிவும் இல்லாதவன் என்று கூறினார். இப்பாடலில், இறைவன் உலகத்துக்கு முதலாகவும் முடிவாகவும் இருக்கிறான் என்றனர். இதனால், தனக்கு ஒரு முதலும் முடிவும் இல்லாதவனே உலகுக்கு முதலும் முடிவும் செய்ய முடியும் என்பது விளங்குகிறது. ‘தோற்றமாம் பொற்பாதம்’ என்பது முதலாக இறைவனது ஐந்தொழில்களும் கூறப்பட்டன. ‘காணாத’ என்பது இறைவனது மறைத்தல் தொழிலைப் புலப்படுத்தியது. புண்டரிகம் உருவகமாய்த் திருவடியை உணர்த்திற்று. இறுதியிலுள்ள ‘போற்றி’ எச்சம். இது, பெண்கள், மார்கழி நீராட்டின் பெருமை கூறியபடியாம். ‘ஆற்றுநீர், குளத்து நீர்’ என இடம் பற்றி வழங்குதல் போல, ‘மார்கழி நீர்’ எனக் காலம்பற்றி வழங்கப்படும். இனி, ‘மார்கழியில் நீராடுக’ என்றும் பொருள் கூறலாம். இதனால், இறைவனது ஐந்து தொழில்களும் கூறப்பட்டன. 20 திருச்சிற்றம்பலம்
|