8. திரு அம்மானை திருவண்ணாமலையில் அருளிச்செய்தது அம்மானை என்று ஒவ்வொரு பாட்டு இறுதியிலும் முடிகின்றமையால், இது திரு அம்மானை என்னும் பெயருடையதாயிற்று. ‘திரு’ என்பது அடைமொழி. ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று. இது, மூன்று பெண்கள் கூடி மூன்று காய்களை வைத்துக்கொண்டு ஆடுவது. அவ்வாறு விளையாடுங்கால் பாடுவது போல அமைந்துள்ளது இப்பகுதி. திருவெம்பாவையில் நீராடலைக் குறித்து, இங்கு அம்மானை யாடலைக் குறித்தார் ஆசிரியர். ஆனந்தக்களிப்பு திருவருள் அனுபவத்தினால் உண்டாகும் சுகமேலீடு இத்திரு வம்மானைப் பகுதியில் கூறப்படுகின்றது என்பதையே, ‘ஆனந்தக் களிப்பு’ என்று குறித்தனர் முன்னோர். (ஒப்புமை பற்றி வந்த ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா) திருச்சிற்றம்பலம் செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணண் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : செங்கண் நெடுமாலும் - செந்தாமரை போன்ற கண்ணையுடைய நெடிய திருமாலும், சென்று இடந்தும் - பன்றி உருவாய்ச் சென்று நிலத்தைப் பிளந்தும், காண்பு அரிய - காணுதற்கு அருமையாகிய, பொங்கும் - விளங்குகின்ற, மலர்ப்பாதம் - தாமரை போன்ற திருவடிகள், பூதலத்தே போந்தருளி - நிலவுலகத்தே எழுந்தருளி, எங்கள் பிறப்பு அறுத்திட்டு - எங்களது பிறப்பை அறுத்து ஒழித்து, எம் தரமும் ஆட்கொண்டு - எம் நிலையில் உள்ளவரையும் அடிமை கொண்டு, தெங்கு திரள் சோலை - தென்னை மரங்கள் திரண்ட சோலை சூழ்ந்த, தென் நன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்துறையையுடையான், அங்கணண் - அழகிய கண்ணையுடையான், அந்தணண் ஆய் - அந்தணணனாகி வந்து, அறை கூவி - வலிய அழைத்து, வீடு அருளும் - முத்தியைத் தந்தருள்கின்ற, அம் கருணை - அழகிய கருணையையுடைய,
|