வார்கழலே - நீண்ட வீரக்கழல் அணிந்த திருவடியின் பெருமையையே, அம்மானாய் - அம்மானைப்பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : ‘தரம்’ என்பது, அதனை உடையவரைக் குறித்தது. தென்னன் - தென்னாடு உடையவன் என்றும் கூறலாம். கண்ணுக்கு அழகாவது இரக்கம். ‘கண்ணோட்டம்’ என்பார் திருவள்ளுவர். இறைவன் உயிர்களுக்குக் கைம்மாறு கருதாது அருளுகின்றானாதலின், ‘அங்கணன்’ என்றார். திருப்பெருந்துறையில் அடிகளை ஆட்கொண்டருளிய கோலம் அந்தண வடிவமாதலின், ‘அந்தணனாய்’ என்றார். ஐந்து தொழில்களையும் புரிவது திருவடியேயாதலின், ஆட்கொண்டதும் திருவடியே என்பார், ‘அங்கருணை வார்கழலே பாடுதும்’ என்றார். ‘அம்மானையாய்’ என்பது, ‘அம்மானாய்’ என மருவிற்று’, ‘ஆய்’ என்பது, ‘ஆக’ என்பதன் திரிபு. இதனால், இறைவன் குருவாய் எழுந்தருளின கருணை கூறப்பட்டது. 1 பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : பாரார் - மண்ணுலகத்தாரும், விசும்புள்ளார் - விண்ணுலகத்தாரும், பாதாளத்தார் - கீழுலகத்தாரும், புறத்தார் - இவற்றிற்குப் புறமாய வேறு உலகத்தாரும், ஆகிய, ஆராலும் - யாவராலும், காண்டற்கு அரியான் - காண்பதற்கு அருமையானவன்; ஆயினும், எமக்கு - எங்களுக்கு, எளிய பேராளன் - எளிவந்தருளிய பெருமையுடையான், தென்நன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்துறையை உடையான், பிச்சு ஏற்றி - எமக்குப் பித்து மிகும்படி செய்து, வாரா வழி - மீண்டும் பிறவிக்கு வாராத முத்தி நெறியை, அருளி - அளித்து, என் உளம் வந்து புகுந்து - என் மனத்திலே வந்து புகுந்து, ஆரா அமுது ஆய் - தெவிட்டாத அமுதமாகி, அலைகடல்வாய் - அலையையுடைய கடலின்கண், மீன் விசிறும் - மீனின்பொருட்டு வலை வீசின, பேராசை வாரியனை - பேரின்பக் கடலானவனது புகழை, அம்மானாய் - அம்மானைப்பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.
|