விளக்கம் : சென்ற திருப்பாட்டில் திருமாலால் இறைவனைக் காண முடியவில்லை என்றார். இங்கு யாராலும் காண முடியவில்லை என்பார், ‘பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் யாராலும் காண்டற்கு அரியான்’ என்றார். தன் முனைப்பினால் காண முயன்றமையால் அவர்களுக்குக் காண முடியவில்லை; ஆயினும், அன்பராகிய எமக்கு எளிதில் கிடைத்தான் என்பார், ‘எமக்கு எளிய பேராளன்’ என்றார். இறைவன் தம் மனத்திடை மன்னி இனிய சுவைப் பொருளாய் உள்ளான் என்பார், ‘வந்தெம் உளம்புகுந்த ஆரா அமுதாய்’ என்றார். அலைகடல்வாய் மீன் விசிறிய வரலாறு கீர்த்தித் திருவகவலில் ‘கேவேடராகிக் கெளிறது படுத்தும்’ என்றதற்குள்ள உரையிற் காண்க. ‘பேராசை’ என்றதில், ‘ஆசை’ என்பது இன்பத்தைக் குளித்தது. இதனால், இறைவன் தேவர்க்கு அரியவனாய், அடியார்க்கு எளியவன் ஆகின்றான் என்பது கூறப்பட்டது. 2 இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். பதப்பொருள் : இந்திரனும் - தேவேந்திரனும், மால் அயனும் - திருமாலும் பிரமனும், வானோரும் - மற்றைய தேவரும், ஏனோரும் - பிற கணத்தவரும், அந்தரமே நிற்க - விண்ணிலே நிற்க, சிவன் - சிவபெருமான், அவனி வந்தருளி - மண்ணுலகத்தில் எழுந்தருளி, எம் தரமும் ஆட்கொண்டு - எம் நிலையில் உள்ளாரையும் அடிமை கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய் - திருத்தோளில் பூசிய திருவெண்ணீற்றையுடையனாய், வந்து - எம்மிடத்து வந்து, சிந்தனையை உருக்கும் - மனத்தை உருக்குகின்ற, சீர் ஆர் - சிறப்புப் பொருந்திய, பெருந்துறையான் - திருப்பெருந்துறையை யுடையான், பந்தம் பரிய - எமது பற்று அறுபட, பரிமேற்கொண்டான் - குதிரைமீது வந்தவனாகிய பெருமான், தந்த - அருள் செய்த, அந்தம் இல்லா - முடிவில்லாத, ஆனந்தம் - இன்பத்தை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக. விளக்கம் : ஏனோரும் என்றது, பதினெண்கணங்களுள் தேவர் தவிர் மற்றையவர்களை. இறைவனது திருமேனியிலே பால் வெண்ணீறு அணிகோலம் மனத்தை உருக்கச் செய்யுமாதலின் ‘தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்கும்’ என்றார். ‘பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு’ காண மனிதப்
|