பக்கம் எண் :

திருவாசகம்
352


எந்தையெந் தாய்சுற்ற மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : எந்தை - எம் தந்தையும், எந்தாய் - எம் தாயும், சுற்றம் - உறவினரும், மற்றும் - மற்றுமுள்ள, என்னுடைய பந்தம் எல்லாம் - என் பாசம் அனைத்தையும், அறுத்து - தொலைத்து, என்னை ஆண்டுகொண்ட - என்னை ஆண்டருளின, பாண்டிப்பிரான் - பாண்டிப் பிரானாகிய, அந்த இடைமருதில், - அந்தத் திருவிடைமருதூரில் உள்ள, ஆனந்தத்தேன் இருந்த - இன்பத்தேன் பொருந்திய, பொந்தைப் பரவி - பொந்தினைத் துதித்து, நாம் பூவல்லி கொய்யாமோ - நாம் பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : பாண்டி நாடே பழம்பதியாக விரும்பிக் கொண்டமையால், இறைவனைப் 'பாண்டிப் பிரான்' என்றார். இறைவன், பொந்து; ஆனந்தம், தேன் என்க. மருதூரை மருது என்றார். அங்கு தலவிருட்சமாய் உள்ளது மருதமரம். தேன் என்றதற்கேற்பப் பொந்து என்றவர், மருது என மரத்தைக் குறித்ததும் ஒரு நயமாகும்.

இதனால், இறைவன் தேனாய்த் தித்தித்திருக்கிறான் என்பது கூறப்பட்டது.

2

நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத் தாண்டான்என் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : தாயிற் பெரிதும் - தாயினும் மிகுந்த, தயாவுடைய தம் பெருமான் - கருணையுடைய தம்பிரான், நாயின் கடைப்பட்ட - நாயினும் கீழான, நம்மையும் - எங்களையும், ஓர் பொருள் படுத்து - ஒரு பொருளாக எண்ணி, மாயப் பிறப்பு அறுத்து - வஞ்சனையைச் செய்யும் பிறப்பை நீக்கி, ஆண்டான் - ஆண்டருளினான் ஆதலால், என் வல்வினையின் வாயில் - எனது வலிய வினைகளின் வாயிலே, பொடி அட்டி - புழுதியை அள்ளியிட்டு, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம்: தாய், ஒரு பிறவியில் கருணை காட்டி உதவுபவள்; இறைவனோ, எல்லாப் பிறவிகளிலும் தோன்றாத் துணையாய் இருந்து கருணை காட்டி உதவுபவன். ஆதலின், 'தாயிற் பெரிதுந் தயாவுடைய தம் பெருமான்' என்றார். குருவருளால் பழவினைகள் செயலற்று ஒழிந்தமையின், 'வினையின் வாயிற்பொடியட்டி' என்று நகைச்சுவைபடக் கூறினார். ஒருமை மனத்துடன் பூக்கொய்வதனால் வருவினையும் இன்றாம்.