இதனால், இறைவன் அருளால் வினைகள் அழியும் என்பது கூறப்பட்டது. 3 பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன்எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : பண்பட்ட - சீர் பொருந்திய, தில்லைப்பதிக்கு அரசை - தில்லையென்னும் திருப்பதிக்கு வேந்தனாகிய சிவபெருமானை, பரவாது - துதியாமல், எண்பட்ட - எண்ணம் அழிந்த, தக்கன் - தக்கனும், அருக்கன் சூரியனும், எச்சன் - யாகத்தின் அதிதேவதையும், இந்து - சந்திரனும், அனல் - அக்கினி தேவனுமாகியோர், விண்பட்ட - ஆகாயத்தில் சஞ்சரிக்கக்கூடிய, பூதப்படை - பூதப் படையையுடைய, வீரபத்திரரால் - வீரபத்திரரால், புண்பட்ட ஆ பாடி - ஊறு எய்தின விதத்தைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : தலங்களுள் தலையாயதாகலின், 'பண்பட்ட தில்லை' என்றார். சிவபெருமானினும் மேன்மை அடையக் கருதி அழிந்தான் ஆதலின் 'எண்பட்ட தக்கன்' என்றார். இதனால், இறைவனை அவமதித்தோர் துன்பம் அடைவர் என்பது கூறப்பட்டது. 4 தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : தேன் ஆடு - தேன் பொருந்திய, கொன்றை - கொன்றை மலரை, சடைக்கு அணிந்த - சடையிலணிந்த, சிவபெருமான் - சிவபெருமானானவன், ஊன் நாடி - மானுட உடம்பைப் பெற்று, உலகர் முன்னே - உலகத்தாரது கண்முன்னே, நாடி வந்து - என்னைத் தேடி வந்து, உள் புகுந்தான் - என் மனத்தில் புகுந்தான், நான் நாடி - நான் தேடி, ஆடி நின்று - அலைந்து நின்று, ஓலமிட - கதறவும் வராமல், நடம் பயிலும் - தில்லையிலே திருநடனம் புரிந்துகொண்டிருக்கின்ற, வான் நாடர் கோவுக்கே - விண்ணுலகத்தார் தலைவனுக்கே, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : இறைவன் ஊன் நாடியது, திருப்பெருந்துறையில் மானுடச் சட்டை தாங்கி வந்து அடிகட்கு அருளியது. அடிகள் அவனை நாடியது, இறைவன் காட்சி கொடுத்துப் பிரிந்த
|