பின்னராம் 'ஓலமிட நடம் பயிலும்' என்றமையால், 'தில்லைக்கு வருக' என்று பணித்தபடி வந்த பின்பும் தமக்கு வெளிப்பட்டு அருள் செய்யாதிருந்தமையைக் குறிப்பிட்டார். இதனால், இறைவனைப் பிரிந்து வாழ அடியார் விரும்பமாட்டார் என்பது கூறப்பட்டது. 5 எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : உரு மூன்றும் ஆகி - மும்மூர்த்திகளாகி, உணர்வு அரிதாம் ஒருவனுமே - அரிதற்கரிய பொருளாயுள்ள ஒருவனுமே, எரி மூன்று தேவர்க்கு - முத்தீயின் வழியாக அவிசை ஏற்கின்ற தேவர்களுக்கு, இரங்கி அருள் செய்தருளி - இரங்கி அருள் செய்து, சிரம் மூன்று அற - திரிபுரத்தவர்கள் தலை அற்று விழும்படி, தன் திருப்புருவம் நெரித்தருளி - தனது திருப்புருவத்தை வளைத்தருளி, புரம் மூன்று எரித்த ஆ - மூன்று புரங்களையும் எரித்த விதத்தைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : மூன்று எரியாவன, காருகபத்தியம் ஆகவனீயம் தட்சிணாக்கினி என்பன. அக்கினியில் பெய்யும் அவிசினை ஏற்போர் தேவராதலின், 'எரிமூன்று தேவர்' என்றார். முப்புரத்தவராகிய தாருகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களின் தலை அற்று விழும்படி செய்தான் என்பார், 'சிரமூன்றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி' என்றார். 'எரித்தவா' என்னுமிடத்தில் 'பாடி' என்பது வருவித்தற்கு உரியது. உரு மூன்றும் என்றதற்கு, அருவம் அருவுருவம் உருவம் என்ற மூன்றையும் கொள்வாரும் உளர். இறைவனே தன்னை உணர்த்தினாலன்றி அவனை யாரும் உணர முடியாதாதலின், 'உணர்வரிதாம் ஒருவன்' என்றார். இதனால், இறைவனது ஆற்றல் கூறப்பட்டது. 6 வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத் திணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் அணங்கொ டணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : எம்பெருமான் - எமது பெருமான், வார்கழல் - நீண்ட திருவடியை, வணங்க - வணங்குவதற்கு, தலை வைத்து - எனக்குத் தலையைக் கொடுத்து, வாழ்த்த - அத்திருவடியை வாழ்த்துவதற்கு, வாய் வைத்து - எனக்கு வாயைக் கொடுத்து, இணங்க - அடியேன் கூடுவதற்கு, தன்சீர் அடியார் கூட்டமும் வைத்து - தன்னுடைய சிறந்த அடியார் கூட்டமும்
|