அம்பும், பெருமிகை - பெரிதும் வேண்டாத ஒன்றாயிற்று என்று சொல்லி, உந்தீபற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : இறைவன் திருமாலையே அம்பாகக் கொண்டானாதலின், 'ஒரம்பே' என்றார். அதனையும் பயன்படுத்தாது திரிபுரத்தைச் சிரித்தே எரித்தானாதலின், 'ஒன்றும் பெருமிகை' என்றார். எல்லாவற்றையும் சங்கற்பத்தாலே செய்கின்ற இறைவனுக்குக் கருவி ஒன்றும் வேண்டா என்பதாம். இதனால், இறைவனது சங்கற்ப சத்தி கூறப்பட்டது. 2 தச்சு விடுத்தலுந் தாமடி யிட்டலும் அச்சு முரிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற. பதப்பொருள் : தச்சு விடுத்தலும் - தேவர்கள் தேரினை இணைத்து விடுத்தும், தாம் அடி இட்டலும் - அத்தேரில் சிவபெருமான் அடி எடுத்து வைத்தலும், அச்சு முரிந்தது என்று - அத்தேரின் அச்சு இற்று ஒடந்தது என்றும், முப்புரம் அழிந்தன - ஆனாலும் திரிபுரம் அழிந்தன என்றும் சொல்லி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : தேவர்கள் இறைவனுக்குப் பூமியைத் தேர்த் தட்டாகவும், சூரியசந்திரர்களைத் தேர்ச்சக்கரமாகவும், கலைகளைக் காலாகவும் கொண்டு தேர் அமைத்துத் தந்தனர் என்பார், 'தச்சு விடுத்தலும்' என்றும், ஆயினும் அது இறைவனைத் தாங்கமாட்டாதாயிற்று என்பார், 'தாம் அடியிட்டலும் அச்சு முரிந்தது' என்றும் கூறினார். இதனால், இறைவன் திருவடிப் பெருமை கூறப்பட்டது. 3 உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. பதப்பொருள் : உய்ய வல்லார் - திரிபுரத்தில் பிழைக்க வல்லவராகிய, ஒருமூவரை - சிவ பத்தியில் ஈடுபட்ட ஒருமூன்று பெயர்களை. காவல் கொண்டு - காத்து, எய்ய வல்லானுக்கே - ஏனையோரை அழிக்க வல்லவன் பொருட்டாகவே, இளமுலை பங்கன் என்று - இளமை மாறாத தனங்களையுடைய தேவியின் பாகன் என்று சொல்லி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : முப்புரமெரித்த போது சிவபத்தியில் திளைத்த சுதன்மன், சுசூலன், சுபுத்தி என்ற மூவரை மட்டும் அழிக்காமல் காத்தான் என்பார், 'உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு என்றார். இவ்வரலாற்றைக் காஞ்சிப்புராணம் முப்புராரி கோட்டப் படலத்துள் காண்க. இதுகாறும் முப்புரம் அழித்ததைக் கூறியபடியாம்.
|