இதனால், இறைவன் தன்னைக் காப்பவன் என்பது கூறப்பட்டது. 4 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற. பதப்பொருள் : சாடிய - வீரபத்திரர் தாக்கிய, வேள்வி சரிந்திட - தக்கன் யாகமானது அழியவே, தேவர்கள் ஓடியஆ பாடி - தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடிய விதத்தைப் பாடி, உருத்திரநாதனுக்கு - உருத்திரனாகிய தலைவன்பொருட்டு, உந்தீபற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : தக்கன் யாகத்தில் வீரபத்திரருக்கு ஆற்றாது தேவர்கள் அஞ்சி ஓடினார்கள் என்பார், 'தேவர்கள் ஒடியவாபாடி' என்றார். 'உருத்திரநாதனுக்கு' என்பது, உருத்திரேனே நாதன் என்ற பொருளில் நின்றது. உருத்திரன் - அழித்தற்கடவுள். இதனால், அந்தத்தைச் செய்பவனே முதல்வன் என்பது கூறப்பட்டது. 5 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தான்என் றுந்தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. பதப்பொருள் : சதுர்முகன் தாதை - பிரமதேவனுக்குத் தந்தையாகிய, திருமால் - திருமாலானவன், அவிப்பாகம் கொண்டு - தக்கன் வேள்வியில் அவியுணவைக் கொண்டு, அன்று - அந்நாளில், சாவாது இருந்தான் என்று - வீரபத்திரரால் பெரிதும் தாக்கப்பட்டு உயிர் ஒன்றையுமே உடையவனாய் இருந்தான் என்று சொல்லி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : அவ்வேள்வியில் வீரபத்திரரால் நெஞ்சில் தாக்குண்டும் திருமால் இறவாதிருந்தான் என்பது, இறத்தலைக்காட்டிலும் அத்துணைத் துன்பம் அடைந்தான் என்றபடி. 'சதுர்முகன் தாதை' என்றதனால், படைத்தல் காத்தல்களுக்குக் காரணமாய் இருக்கின்றவனை ஏனையோர் போல அழித்தல் வேண்டா என்பது சிவபெருமானது திருவுள்ளம் என்ற குறிப்பை உணரலாம். இதனால், இறைவன் தீமை செய்தார் எத்தகையோராயினும் தண்டனையளிப்பான் என்பது கூறப்பட்டது. 6 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென்றுந்தீபற. பதப்பொருள் : வெய்யவன் - விருப்பமுடையவனாகிய, அங்கி - அக்கினி தேவன், விழுங்க - அவியை விழுங்கும்பொருட்டு, திரட்டிய - வளைத்த, கையை - கைகளை, தறித்தான் என்று - வெட்டினான்
|