17. அன்னைப்பத்து (தில்லையில் அருளிச்செய்தது) தலைவியின் நிலையைத் தோழி செவிலிக்குச் கூறுவது போலச் செய்யப்பட்டது இப்பகுதி. செவிலி, வளர்ப்புத்தாய். இதில் அன்னே என்றது தோழியை நோக்கித் தலைவி கூறியது. என்னும் என்பது மாத்திரம் தோழியினது கூற்று. ஏனையவை தலைவி கூற்று. அன்னே என்று பல முறையும் விளித்துக் கூறியதாகச் சொல்லப்படுவதால், 'அன்னைப்பத்து' எனப்பட்டது. தலைவி தோழியை, 'அன்னே' என்று அழைத்தல் பொருந்தும் என்பதனை, "அன்னை என்னை" என்னும் சூத்திரத்தால் உணரப்படும். (தொல், பொருள், பொருளியல் - 52). ஆத்தும பூரணம் ஆன்மா சிவனுடனே நிறைந்து நிற்றல். கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினார் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும். பதப்பொருள் : அன்னே - தாயே, வேதமொழியர் - (என்னால் காணப்பட்டவர்) வேதங்களாகிய சொல்லையுடையவர், வெண்ணீற்றர் - வெண்மையான திருநீற்றினை அணிந்தவர், செம்மேனியர் - செம்மையான திருமேனியை உடையவர், நாதப்பறையினர் - நாதமாகிய பறையினையுடையவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள், மேலும், அன்னே - தாயே, நாதப்பறையினர் இந்நாதர் - நாதமாகிய பறையையுடைய இத்தலைவரே, நான்முகன் மாலுக்கும் - பிரம விட்டுணுக்களுக்கும், நாதர் - தலைவராவார், என்னும் - என்று சொல்லுவாள். விளக்கம் : நாதப்பறையினர் என்றது, நாத தத்துவத்திடத்து ஒலிக்கும் ஓங்கார ஒலியையே பறை முழக்கமாக உடையவர் என்பதாம். நான்கடிகளும் அளவடிகளேயாய் இருத்தல்பற்றி, இச்செய்யுள்களைக் 'கலி விருத்தம்' என்பர்.
|