பக்கம் எண் :

திருவாசகம்
392


இதனால், இறைவன், நான்முகன் மாலுக்கும் நாதன் என்பது கூறப்பட்டது.

1

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.

பதப்பொருள் : அன்னே - தாயே, கண் அஞ்சனத்தர் - (என்னால் காணப்பட்டவர்) கண்ணில் தீட்டப்பட்ட மையையுடையவர், கருணைக் கடலினர் - கருணைக்கடலாயிருப்பவர், உள் நின்று உருக்குவர் - உள்ளத்தில் நின்று உருக்குவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, உள் நின்று உருக்கி - உள்ளத்தில் நின்று உருக்கி, உலப்பு இலா - அழிவில்லாத, ஆனந்தக்கண்ணீர் - இன்பக் கண்ணீரை, தருவர் - உண்டாக்குவர், என்னும் - என்று சொல்லுவாள்.

விளக்கம் : ஒரு பாகம் அம்மையின் வடிவமாய் இருத்தல் பற்றி, 'கண்ணஞ்சனத்தர்' என்றார். உள் நின்று உருக்குதலாவது, உயிருக்குயிராய் இருந்து ஆன்மபோதம் கெடும்படி செய்தலாம். ஆல், அசை.

இதனால், இறைவன் நினைந்துருகும் அடியாரை நைய வைப்பான் என்பது கூறப்பட்டது.

2

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்.

பதப்பொருள் : அன்னே - தாயே, நித்த மணாளர் - (என்னால் காணப்பட்டவர்) என்றும் மணவாளக் கோலமுடையவர், நிரம்ப அழகியர் - பேரழகை உடையவர், சித்தத்து இருப்பவர் - என் மனத்தில் இருப்பவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, சித்தத்து இருப்பவர் - என் மனத்தில் இருக்கின்ற அவர், தென்னன் பெருந்துறை அத்தர் - தென்னாட்டில் உள்ள பெருந்துறைக்கடவுள், ஆனந்தர் - ஆனந்த வடிவினர், என்னும் - என்று சொல்லுவாள்.

விளக்கம் : நித்திய கலியாணசுந்தரராதலின், 'நித்த மணாளர்' என்றார். ஆனந்தர் என்றதற்கு ஆனந்தந்தருபவர் என்ற பொருளும் கொள்ளலாம்.

இதனால், இறைவன், அடியார் மனத்தைக் கோயிலாகக் கொள்பவன் என்பது கூறப்பட்டது.

3