பக்கம் எண் :

திருவாசகம்
393


ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுவென்னே அன்னே என்னும்.

பதப்பொருள் : அன்னே - தாயே, பூண் ஆடு அர - (என்னால் காணப்பட்டவருக்கு) ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடைத்தோல் - உடையாகிய புலித்தோலும், பூசிற்றுப்பொடி - பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த, ஓர் வேடம் இருந்தவாறு - ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே, என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, வேடம் இருந்த ஆ கண்டுகண்டு - அவ்வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் உள்ளம் வாடும் - என் மனம் வாடுகின்றது, இது என்னே - இது என்ன காரணம். என்னும் - என்று சொல்லுவாள்.

விளக்கம் : பாம்பணியும் தோல் ஆடையும் வெண்ணீற்றுப் பூச்சும் வியப்பை விளைவிக்கின்றன என்பாள், 'ஓர்வேடம் இருந்தவாறு' என்றாள். 'என்னே' என்பது சொல்லெச்சம். 'இக்கோலம் நம்பொருட்டன்றி நாதன்பொருட்டன்று,' என்று எண்ணும் போது என் உள்ளம் மெலிகிறது என்பாள், 'கண்டுகண்டு என்னுள்ளம் வாடும்' என்றாள்.

இதனால், இறைவன் வேடத்தில் அருமை கூறப்பட்டது.

4

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும்.

பதப்பொருள் : அன்னே - தாயே, நீண்ட கரத்தர் - (என்னால் காணப்பட்டவர்) நீண்ட கையினையுடையவர், நெறிதரு குஞ்சியர் - வளைவுடைய சடையை உடையவர், நல் பாண்டி நாடர் - நல்ல பாண்டிய நாட்டையுடையவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, நல்பாண்டி நாடர் - நல்ல பாண்டி நாட்டையுடைய அவர், பரந்து எழு சிந்தையை - விரிந்து செல்லுகின்ற மனத்தை, ஆண்டு அன்பு செய்வர் - அடக்கியாண்டு அருள் செய்வர், என்னும் - என்று சொல்லுவாள்.

விளக்கம் : இறைவனுக்குப் பாண்டி நாடே பழம்பதியாதலின், 'பாண்டி நன்னாடர்' என்றாள். 'வேகங்கெடுத்தாண்ட வேந்தன்' ஆதலின், 'பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வர்' என்றாள்.

இதனால், இறைவன் பாண்டி நாட்டையுடையவன் என்பது கூறப்பட்டது,

5