பக்கம் எண் :

திருவாசகம்
394


உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்னெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்னெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்.

பதப்பொருள் : அன்னே - தாயே, உன்னற்கு அரிய - நினைத்தற்கு அருமையான, சீர் உத்தர மங்கையர் - சிறப்புப் பொருந்திய திருவுத்தர கோசமங்கையையுடையவர், என் நெஞ்சில் மன்னுவது - என் நெஞ்சில் நிலை பெற்றிருப்பார், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, மால் அயன் காண்கிலார் - திருமால் அயனாலும் காண முடியாதவர், என் நெஞ்சில் மன்னுவது - என் நெஞ்சில் நிலைபெற்றிருப்பது, என்ன அதிசயம் - என்ன ஆச்சரியம், என்னும் - என்று சொல்லுவாள்.

விளக்கம் : 'உத்தரகோச மங்கை' என்பது. 'உத்தர மங்கை' எனக் குறைந்து நின்றது. இறைவன் உறைகின்ற இடத்தின் பெருமையைக் காட்ட, 'உன்னற்கரிய சீர் உத்தர மங்கையர்' என்றாள். அத்துணைப் பெருமையான இடத்தை விட்டு என் நெஞ்சில் உறைகின்றான் என்பாள், 'மன்னுவது என் நெஞ்சில்' என்றாள். மன்னுதல் என்றது, இடைவிடாது இருத்தல் என்றபடி, 'இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்றதையும் நோக்குக.

இதனால், இறைவன் அடியார் நெஞ்சில் இமைப்போதும் நீங்காது உறைவான் என்பது கூறப்பட்டது.

6

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்.

பதப்பொருள் : அன்னே - தாயே, வெள்ளைக் கலிங்கத்தர் - (என்னால் காணப்பட்டவர்) வெள்ளைக் ஆடைடையுடையவர், வெள் திருமுண்டத்தர் - வெள்ளிய திருநீறணிந்த நெற்றியையுடையவர், பள்ளிக் குப்பாயத்தர் - குதிரையேற்றத்திற்கு உரிய சட்டையை அணிந்தவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, பள்ளிக் குப்பாயத்தர் - குதிரையேற்றத்திற்கு உரிய சட்டையை அணிந்தவர், பாய் பரிமேல் கொண்டு - பாய்ந்து செல்லும் குதிரைமேல் வந்து, என் உள்ளம் கவர்வர் - என் மனத்தைக் கவர்வர், என்னும் - என்று சொல்லுவாள்.

விளக்கம் : இறைவனுக்குத் துறவிகட்குரிய கல்லாடையே அன்றி, பிரமசாரிகட்கு உரிய வெள்ளாடையும் உண்டு ஆதலின், 'வெள்ளைக் கலிங்கத்தர்' என்றார். 'பள்ளிக்குப்பாயத்தர்' என்பதற்குப் பள்ளிகொள்வானாகிய திருமாலின் அவதாரங்