கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் படை. பதப்பொருள்: கோல் தேன் மொழி - கொம்புத்தேன் போன்ற இனிய மொழியையுடைய, கிள்ளாய் - கிளியே, கோது இல் - குற்றமில்லாத, பெருந்துறைக்கோன் - திருப்பெருந்துறைக்கு மன்னன், கைக்கொள் படை - தனது கையில் ஏந்தும் ஆயுதம், ஏற்றார் - தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடியவரது, அழுக்கு அடையா - களங்கம் அடையாத, நெஞ்சு உருக - மனம் உருகும்படி, மும்மலங்கள் பாயும் - மும்மலங்களையும் அறுப்பதான, கழுக்கடை - சூலமே, மாற்றாரை வெல்லும் - பகைவரை வெல்லுகின்ற, படை பகராய் - அந்த ஆயுதத்தினைக் கூறுவாயாக. விளக்கம்: சூலம், முத்தலை வேலாதலின் அதனைக் கைக்கொண்டு மூலமாகிய மும்மலங்களையும் அறுக்கிறான் என்பதை, 'கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும் மூலமாகிய மும்மல மறுக்கும்' என்ற கீர்த்தித்திருவகவல் அடிகளால் அறிக. காண் முன்னிலை அசை. இதனால், இறைவனது படைக்கலம் கூறப்பட்டது. 7 இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை. பதப்பொருள்: இன் - இனிய, பால் - பால் போன்ற, மொழி - மொழியினையுடைய, கிள்ளாய் - கிளியே, எங்கள் பெருந்துறைக்கோன் - எங்கள் திருப்பெருந்துறை மன்னனது, அன்பால் - (அடியார்கள் தன்பால் வைத்த) அன்பு காரணமாக, பிறவிப் பகை கலங்க - அவரது பிறவியாகிய பகை கலங்கி அழிய, பேரின்பத்து ஓங்கும் - பேரின்ப நிலையிலே மிக்கு ஒலிக்கும், பருமிக்க - பருமை மிகுந்த, நாதப்பறை - நாதமேயான பறையாகிய, முன்பால் - அவன் திருமுன்பு, முழங்கும் - ஒலிக்கின்ற, முரசு இயம்பாய் - முரசினைச் சொல்வாயாக. விளக்கம்: 'அன்பால்' என்றது இங்கு அடியார் செலுத்தும் அன்பினைக் குறித்தது. அன்பு செலுத்தினால் பிறவி ஒழியுமாதலின், 'பிறவி கலங்க' என்றாள். நாதம் என்பது சூக்குமை வாக்கு என்க. இது நுண்மையாக ஒலித்துப் பேரின்பம் பயக்குமாதலின், 'பேரின்பத் தோங்கும் நாதப்பறை' என்றாள். 'நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்' என்ற கீர்த்தித்திருவகவல் அடியை ஒப்பிட்டுக்கொள்க.
|