பக்கம் எண் :

திருவாசகம்
409


இதனால், இறைவனது பறை கூறப்பட்டது.

8

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார்என் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார்.

பதப்பொருள்: ஆயமொழிக் கிள்ளாய் - இனிமை பொருந்திய மொழிகளையுடைய கிளியே, தீய வினை - தீவினைகள், நாளும் அணுகா வண்ணம் - எந்நாளும் சேரா வகை, நாயேனை ஆள் உடையான் - நாய் போன்ற என்னை ஆளாக உடையவன், உவந்த - விரும்பி அணிந்த, தார் - மாலை, தாளி அறுகாம் - அறுகம்புல் மாலையேயாம்; அதுவே, அள்ளூறும் அன்பர்பால் - என்பும் உருகுகின்ற அன்பரிடத்து, மேய - பொருந்துகின்ற, பெருந்துறையான் - திருப்பெருந்துறை மன்னனது, மெய் - உண்மையாகிய, தார் - மாலை, என் - என்று சொல்வாயாக.

விளக்கம்: கொன்றைமாலை போலவே கழுநீர் மாலை தாளியறுகு மாலைகளையும் சிறப்பாகச் சிவபெருமான் அணிபவன் என்பதை விளக்க, கீர்த்தித்திருவகவலில் கழுநீர் மாலையையும், இங்குத் தாளியறுகின் மாலையையும் அடையாள மாலையாகக் கூறினார். 'தாளியறுகு' என்பது அறுகம்புல்லில் ஒரு வகை என்பது முன்னர்க் கூறப்பட்டது.

இதனால், இறைவனது மாலை கூறப்பட்டது.

9

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலால் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாங் கொடி.

பதப்பொருள்: சோலைப் பசுங்கிளியே - சோலையில் வாழ்கின்ற பச்சைக்கிளியே, தூநீர் - தூய்மையான நீர் சூழ்ந்த, பெருந்துறைக் கோன் கொடி - திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது, ஏதிலார் - பகைவர், சாலவும் - மிகவும், துண்ணென்ன - திடுக்கிட்டு அஞ்சும்படி, மேல் விளங்கி - மேலே விளங்கி, ஏர் காட்டும் - அழகைக் காட்டுகின்ற, கோது இலா - குற்றமில்லாத, ஏறு ஆம் - இடபமேயாகும், கோலம் பொலியும் - அழகு விளங்கும், கொடி கூறாய் - அக்கொடியினைக் கூறுவாயாக.

விளக்கம்: பகைவத்க்கு இக்கொடி அச்சம் விளைவிக்கு மாதலின், 'ஏதிலார் துண்ணென்ன' என்றாள். எனினும், நன்மையே பயக்குமாதலின், 'கோதிலாக் கொடி' என்றாள். இடபக்கொடி என்பது, இடபம் எழுதப்பட்ட கொடியாம்.

இதனால், இறைவனது கொடி கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்